உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடந்தை கோவிலில் நிழற்பந்தல் அமைக்கணும்!

திருவிடந்தை கோவிலில் நிழற்பந்தல் அமைக்கணும்!

மாமல்லபுரம்: நித்ய கல்யாண பெருமாள் கோவிலில்,வெயில், மழையில் அவதிப்படுவதை தவிர்க்க, நிழற்பந்தல் அமைக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் அமைந்து, திருமண பரிகார கோவிலாக விளங்குகிறது.தமிழக இந்து சமய அறநிலைய, மத்திய தொல்லியல் ஆகிய துறைகள் நிர்வகிக்கும் இக்கோவிலுக்கு, கடந்த மாதம், மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி, மழைநீர் வெளியேற்று கால்வாய் அமைத்து, பக்தர்களுக்கு, கற்களாலான நடைபாதை அமைக்க, தொல்லியல் நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.இதற்கிடையே, அறநிலைய நிர்வாகம், பக்தர்களை ஒழுங்குபடுத்தி, வரிசையில் அனுமதிக்கவும், நிழலில் காத்திருக்கவும் கருதி, இப்பகுதியில், சவுக்குத்தடுப்புடன், சிறிய பந்தல் அமைக்க முயன்றது. தொல்லியல் துறையோ, வடிகால் பணியை முடிக்கும் வரை, தடுப்பு அமைக்க அனுமதிக்க இயலாது என அறிவுறுத்தி, தடுப்பை அகற்றியது.

பிற நாட்களை பொறுத்தவரை, பக்தர்கள் மிகவும் குறைவு. வார இறுதி விடுமுறை நாட்களில், தரிசனத்திற்காக, ஏராளமானோர் வருகின்றனர். இந்நிலையில், நீண்ட நேரம் காத்திருந்தே தரிசிக்கும் நிலையில், திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். அவர்கள் நலனிற்காக, வரிசை தடுப்பு, நிழற்பந்தல் அமைக்கப்பட்டால், சிரமமின்றி தரிசிப்பர். இதற்கு, தொல்லியல் துறை அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !