கவுண்டப்பார் கோயிலுக்கு அடிப்படை வசதிகள் அவசியம்
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே கவுண்டப்பார் கோயிலுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். தொப்பம்பட்டி ஒன்றியம், பாலப்பன்பட்டி ஊராட்சியில் கவுண்டப்பார் கோயில் உள்ளது. நான்கு தலைமுறைகளுக்கு மேலான பழமையுள்ள இக்கோயில், 40 ஆண்டுகளுக்கு முன் பழநி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பாம்புகளை கண்ணில் பார்க்கக் கூடாது, குழந்தை வரம் வேண்டும் என நேர்த்திக் கடன் செய்வோர் இக்கோயிலில் வேண்டிக் கொள்கின்றனர். நேர்த்திக் கடனை பொங்கல் வைத்தும், சேவல் அறுத்து பலியிட்டும் வழிபடுவர். கேரளா, திருப்பூர், கோவை, தேனி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். ஆடி, ஆவணி மற்றும் விசஷே நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. கழிப்பறை, குளியலறை வசதிகள் இல்லை. திறந்த வெளியில் பொங்கல் வைக்கின்றனர். பக்தர் வசதிக்காக கோயில் பூஜாரியே, சிமென்ட் ஷீட் போட்ட கட்டடங்களை கட்டினார். இவற்றை தொப்பம்பட்டி ஊராட்சி நிர்வாகம் இடித்து விட்டது. தற்போது இப்பகுதியில் காற்று பலமாக வீசிவருவதால், நேர்த்திக்கடனை நிறைவேற்ற வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இக்கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.