ஆக.16 வரை திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி
திருப்பதி: திருப்பதி திருமலை கோயிலில், திவ்யதரிசன டோக்கன்கள், சர்வ தரிசன டோக்கன்கள் ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை: திருமலை கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் ஆக.11 முதல் 16 வரை நடைபெறுகிறது. இந்த விழா காலத்தில் ரூ.300 தரிசன டிக்கெட்கள், திவ்ய தரிசன டோக்கன்கள், சர்வ தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர் இடையீட்டு தரிசனம், ஆர்ஜித சேவா டிக்கெட்கள், முதியோர், மாற்றுத்திறனாளி, பச்சிளம் குழந்தைகளுடனான பெற்றோருக்கான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் வேத சம்பிரதாய சடங்குகள் நடக்கும் காரணத்தால், கிடைக்கப்பெறும் குறைந்தளவு காலத்தில் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையான யாத்ரீகர்களுக்கு மட்டும் தரிசனம் சாத்தியமாகும். 16 ஆம் தேதி வரை பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் இலவச தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.