கன்னியக்கோவிலில் தீ மிதி திருவிழா
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில், தீமிதி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பாகூர் அடுத்துள்ள கன்னியக்கோவிலில், மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், தீமிதி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திரு விழா நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 6.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, காலை 10 மணிக்கு வாழுமுனீஸ்வரருக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 12.00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது.
இதில், புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறுபகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக, ஏராளமானோர் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு எம்.எல்.ஏ., இந்து அறநிலைய துறை ஆணையர் தில்லைவேல், தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தனசேகரன், செயலாளர் கலியபெருமாள், துணை தலைவர் ஜீவகணேஷ், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர் கனகராஜ், மற்றும் விழாக்குவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.