உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டியில் அம்மனுக்கு வளைகாப்பு

சின்னாளபட்டியில் அம்மனுக்கு வளைகாப்பு

சின்னாளபட்டி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு சின்னாளபட்டி கோயில்களில், வளைகாப்பு விழா நடந்தது. சின்னாளபட்டி திரு.வி.க.நகரில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் கஞ்சி கலய ஊர்வலமும், ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு ஆடிப்பூர விழா, நேற்று நடந்தது. கோயிலில் இருந்து குங்குமம், பச்சரிசி, மஞ்சள்கிழங்கு, மஞ்சள் வண்ண புடவை, வளையல், வாழை, மாம்பழம், சப்போட்டோ, உள்பட பலவகை பழங்கள், கற்கண்டு, பதார்த்த சீர்வரிசைகளுடன் ஊர்வலம் நடந்தது. கோயில் முன்பு, கர்ப்பிணி, குழந்தை, திருமண வரத்திற்கான பெண்கள் அமர்ந்திருந்தனர். தயிர், எலுமிச்சை, புளியோதரை, தேங்காய், சர்க்கரை, வெண்பொங்கல் உள்ளிட்ட 7 வகை சாதங்கள் படையலுடன், அம்மனுக்கு வளையல் பூட்டுதல் நடந்தது. சிறப்பு பூஜைக்குப்பின், பெண்களுக்கு வளைகாப்பு நடந்தது.

கீழக்கோட்டை மாரியம்மன் கோயில், அம்பாத்துறை ரோடு தேவி கருமாரியம்மன் புற்றுக்கோயிலில், வளைகாப்பு விழா நடந்தது. கன்னிவாடி; தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு ஆடிப்பூர சிறப்பு ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள், திருவிளக்கேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !