திருவாடானை, நயினார்கோவிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. திருவாடானை சிநேகவல்லி உடனாய ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா ஆக.4ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று நடந்தது. முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் மணமக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 11:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், தீபாராதனைகள் நடந்தன. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தேவஸ்தான மகேந்திரன், செயல்அலுவலர் சந்திரசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை ஊஞ்சல் உற்ஸவமும் மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.
பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், ஆடிப்பூர திருக்கல்யாண விழா நடந்தது. ஆக., 3 அன்று இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியும், ஆக., 4ல் காலை 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. அன்று இரவு தொடங்கி, தினமும் நாகநாதசுவாமி, சவுந்தர்யநாயகி அம்மன் இந்திர விமானம், பல்லக்கு, அன்ன, சிம்ம, கமல, குதிரை, காமதேனு வாகனங்களில் வீதிவலம் வந்தார். ஆக., 12ல் காலை 8:00 மணிக்கு அம்மன் தேரோட்டமும், ஆக., 14ல் அம்மன் தபசு மண்டபம் எழுந்தருளி, இரவு புஷ்ப பல்லக்கில் வீதிவலம் வந்தார். நேற்று காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் நாகநாத சுவாமிக்கும் – சவுந்தர்யநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இரவு மின்தீப தேர், தென்னங்குருத்து தேரில் சுவாமி, அம்மன் வீதி வலம் வந்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.