உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு கோலாகலம்

திருமலை ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு கோலாகலம்

திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு, நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, தங்க கோபுர கலசத்திற்கு, புனித நீரால் சம்ப்ரோக் ஷணம் நடத்தப்பட்டது. ஆகம விதிப்படி, வைணவ கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, சிலைகளின் சக்தியை புதுப்பிக்க, மகா சம்ப்ரோக் ஷணம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலில், 1958ல் தேவஸ்தானம், ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க துவங்கியது.இதன்பின், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தவறாமல் மகா சம்ப்ரோக் ஷணத்தை, தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இதன்படி, நேற்று காலை, 10:16 மணி முதல், மதியம், 12:00 மணிக்குள், ஏழுமலையான் தங்க கோபுர கலசத்திற்கும், கோவிலில் மற்ற சன்னதி கோபுர கலசங்களுக்கும், விமரிசையாக மகா சம்ப்ரோக் ஷணம் நடத்தப்பட்டது.இதில், தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்கள், கோவிலுக்கு வெளியில் வெகு துாரத்தில் நிற்க வைக்கப்பட்டனர்.அதன்பின், ருத்விக்கர்கள் மகாபூர்ணாஹுதி நடத்தி, தங்க கலசத்தில் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டிருந்த ஏழுமலையான் சக்தியை, மீண்டும் மூலவர் சிலையில் ஆவாஹனம் செய்தனர். அப்போது, நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது.பின், யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த உற்சவமூர்த்தி சிலைகள் அனைத்தும், ஏழுமலையான் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டு, உரிய இடத்தில் வைக்கப்பட்டன. ஆக.,17 முதல், அக்., 3, வரை, ஏழுமலையானுக்கு, 48 நாட்கள் மண்டாலபிஷேகம் நடக்க உள்ளது.திருமலை ஏழுமலையான் கோவிலில், மகாசம்ப்ரோக் ஷணத்திற்காக பாலாலயம், யாகசாலை ஏற்படுத்த போதிய இடம் இல்லாததால், தர்ம தரிசனத்தை தவிர்த்து, அனைத்து முதன்மை தரிசனங்களும், இம்மாதம், 16ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டன. அதனால், பக்தர்கள் கூட்டம் இல்லாமல், திருமலை வெறிச்சோடியது.இந்நிலையில், நேற்று காலை மகாசம்ப்ரோக் ஷணம் நிறைவு அடைந்ததால், நள்ளிரவு முதல், ரத்து செய்யப்பட்டிருந்த விரைவு தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம், பாதயாத்திரை தரிசனம், வி.ஐ.பி., பிரேக், புரோட்டோகால் உள்ளிட்ட தரிசனங்கள் துவங்கின. இதையடுத்து, ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !