உலவாக் கிழி அருளிய வரலாறு
குலபூஷண பாண்டியன் அந்தணர்களை மதிக்காது ஒதுக்கினான். எனவே அவர்கள் வேதம் ஓதாது, வேள்வி இயற்றாது வேற்றுநாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். ஆகையால் பாண்டிய நாடு மழையின்றிப் பஞ்சத்தில் வசப்பட்டது. அரசரின் செல்வமும் தீர்ந்தது.
இதனால் வேதனை அடைந்த பாண்டியன் இறைவனை பிரார்த்தித்தான். பாண்டியனின், கனவில் தோன்றிய இறைவன் அவன் செய்த பிழைûயும், அந்தணர் பெருமையையும், வேதம் யாகம் ஆகியவற்றின் அவசியத்தையும் உணர்த்தி ‘உலவாக் கிழி’யையும் அளித்து மறைந்தார். உலவாக்கிழி என்பது பொன் மூட்டை, அதில் இருந்து எவ்வளவு பொன்னை எடுத்தாலும் குறையாது. நிறைந்தே இருக்கும் தன்மை உடையது. விழித்து எழுந்த பாண்டியன தன் கையில் உண்மையிலேயே பொற்கிழி இருப்பதைக் கண்டு வியந்தான். பல நாடுகளிலும் இருந்து மறையோரை வரவழைத்து வேதம் ஓதுவித்தான். யாகம் இயற்றினான். பொன்னை வாரி வாரி வழங்கினான். பாண்டிய நாட்டில் மழை பெய்து வளம் பெருகி நலம் நிலவிற்று.