பம்பையில் ராணுவ உதவியுடன் தற்காலிக பாலம் தேவசம்போர்டு அமைச்சர் தகவல்
சபரிமலை, சபரிமலையில் பக்தர்கள் செல்வதற்காக பம்பை ஆற்றின் குறுக்கே ராணுவ உதவியுடன் போர்கால அடிப்படையில் இரண்டு இரும்பு பாலங்கள் அமைக்கப்படும், எ-ன கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.கேரளாவில் பெய்த பெருமழையில் பம்பையில் இரண்டு பாலங்கள் உடைந்தது. பம்பை ஆற்றில் மண் குவிந்து, வேறு பாதையில் ஓடுகிறது. பெரும்பாலான கட்டடங்களும் இடிந்து விட்டது. கோர்ட் உத்தரவு படி ஓண பூஜைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. புரட்டாசி மாத பூஜைக்கு பக்தர்களை அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது பணிகள் விரைவாக நடக்கிறது.கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் பம்பையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.பின்னர் அவர் கூறியதாவது:பம்பை நதியின் குறுக்கே இரண்டு இரும்பு பாலங்கள், ராணுவத்தின் மூலம் அமைக்கப்படும்.ஒரு பாலம் பக்தர்கள் செல்வதற்காகவும், ஒரு பாலம் பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் செல்வதற்கும், ஆம்புலன்ஸ் செல்வதற்கும் பயன்படுத்தப்படும். பம்பை ஹில்டாப்பையும், கணபதிகோயிலையும் இணைத்து இந்த பாலம் அமையும். பம்பையில் மலையாக குவிந்துள்ள மணல் அப்புறப்படுத்தப்பட்டு, நதியை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.பம்பையில் கூடுதல் பயோ -டாய்லட்டுகள் அமைக்கப்படும். குடிநீர் வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும். சேதமைடந்த ரோடுகளில் பக்கசுவர் கட்டி போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படும். ஒரு வழிப்பாதை உள்ளிட்ட போக்குவரத்து கட்டுப்பாடு அமல்படுத்தப்படும். பம்பையில் ராமமூர்த்தி மண்டபம் இடிந்து விட்டதால் தற்காலிக மண்டபம் நிறுவப்படும். பம்பை மருத்துவமனையில் மருந்துகள் தண்ணீர் அடித்து சென்று விட்டதால் கூடுதல் மருந்துகள் வரவழைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.