உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேகரமாகும் எண்ணெய் கோவில்களுக்கு வழங்கலாமே!

சேகரமாகும் எண்ணெய் கோவில்களுக்கு வழங்கலாமே!

திருப்பூர்: பெரிய கோவில்களில் பக்தர்கள் வழங்கும் எண்ணெய்யை சிறு கோவில்களுக்கு வழங்க கிராம கோவில் பூஜாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக கிராம கோவில் பூஜாரிகள், அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பிய மனு: தமிழகத்தில் அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில், ஏறத்தாழ, 3 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. பல்வேறு கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்தால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தீபம் ஏற்றுதல் மற்றும் நந்தா விளக்கு அமைத்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு பெரிய கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் எண்ணெய்யை காணிக்கையாக வழங்குகின்றனர். இது போல் அதிகளவிலான எண்ணெய் பெறப்படும் கோவில்களிலிருந்து  அவற்றை சுற்றுப்பகுதியில் உள்ள சிறு கோவில்கள், ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களுக்கு வழங்கி, அங்கு தீபம் ஏற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளலாம். பல்வேறு கோவில்களில் பரிவட்டம், சுவாமிக்கு பக்தர்கள் சாற்றும் உடைகள் ஆகியவற்றை, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கினால், முறையாக பயன்படுவதோடு, அவற்றை வழங்கும் பக்தர்களுக்கு புண்ணியம் சேர்ப்பதாகவும் இருக்கும். இது குறித்து அறநிலையத்துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையர் நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு, அவர்கள் அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !