சப்த கன்னியம்மனுக்கு கும்பாபிஷேக விழா
திருத்தணி : சப்த கன்னியம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். திருத்தணி அடுத்த சத்திரஞ்ஜெயபுரம் கிராமத் தில், சப்த கன்னியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, வாஸ்து ஹோமம், யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சப்த கன்னியம்மனுக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். இரவு, உற்சவர் அம்மன் வீதியுலாவும், பின் மஹாபாரத நாடகமும் நடந்தது. திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.