பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: சூரனை வதம் செய்த விநாயகர்
திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று (செப்., 9ல்) கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது.விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாட்கள் சதுர்த்திப் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
செப்.,4ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று (செப்.,9ல்) ஆறாம் திருநாளை முன்னிட்டு கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது. சிவனிடம் அழியா வரம் பெற்ற கஜமுக சூரன் தேவர்களை அச்சுறுத்தி வந்தான். சூரனிடமிருந்து தேவர்களை காப்பாற்ற விநாயகர் அவனை வதம் செய்ததாக ஐதீகம். அதனை முன்னிட்டு நேற்று (செப்.,9ல்) மாலை 6:00 மணிக்கு தங்கக் கவசத்தில் மூலவருக்கும், சூரனை வதம் செய்யும் தந்தத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் யானை வாகனத்தில் சுவாமி கோயிலை வலம் வந்தார்.
தொடர்ந்து கோயில் எதிரே குளத்தருகே விநாயகர் எழுந்தருளினார். அங்கு யானை முகத்தில் தேவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த கஜமுக சூரனை எதிர் கொண்டார். மாலை 6:50 மணிக்கு தனது தந்தத்தை உடைத்து சூரனை வதம் செய்து அவனை தனது மூஷிக வாகனமாக்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (செப். 10ல்) காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் மயில் வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். தொடர்ந்து செப்.,12ல் தேரோட்டம், செப்.,13ல் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடையும்.