உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டுபிடிப்பு

நெல்லையில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டுபிடிப்பு

சென்னை : திருநெல்வேலியில் திருடப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில், குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த, 600 ஆண்டுகள் பழமையான, நான்கு பஞ்சலோக சிலைகள் திருட்டு போயின.கடந்த, 1982 ஜூலை, 5ல் திருடப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை மற்றும் சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீபலி நாயகர் சிலைகள் பற்றி, துப்பு துலக்க முடியவில்லை. இதனால், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய போலீசார், கண்டுபிடிக்க முடியாத பட்டியலில், இந்த சிலைகள் திருட்டு வழக்கையும் சேர்த்து விட்டனர்.

இது, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு தெரிய வந்தது. அவரது தலைமையிலான போலீசார், துப்பு துலக்கி, குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் திருட்டு போன, பஞ்சலோக சிலைகள், ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு இருப்பதை கண்டறினர்.திருட்டு போன நான்கு சிலைகளில், 2 அடி உயரமுள்ள, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள, அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அதை, தமிழகத்திற்கு கொண்டு வர, தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

இதுகுறித்து, ஐ.ஜி., - பொன் மாணிக்கவேல் கூறியதாவது: குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் திருடப்பட்ட, பஞ்சலோக சிவகாமி அம்மன் சிலையை, 1985ல், போலீசார் மீட்டு விட்டனர். பாதுகாப்பு கருதி, நெல்லையில் உள்ள, சுப்ரமணியர் கோவிலில் வைக்கப்பட்டு இருப்பதாக, அறநிலையத் துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அது, போலி என, தெரிய வந்துள்ளது.

மீட்டதாக கூறப்பட்டு இருப்பது, சிவகாமி அம்மன் சிலை அல்ல. இதுபற்றி, தீவிர விசாரணை நடத்தி, சிலைகளை திருடி, வெளிநாட்டுக்கு கடத்திய மர்ம ஆசாமிகள், விரைவில் கைது செய்யப்படுவர்.குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில், 15 பஞ்ச லோக சிலைகள் உள்ளன. அவற்றில், போலி சிலைகள் உள்ளதா எனவும், விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !