உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

1. திருப்பரங்குன்றம்:  ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை  திருமணம் செய்து கொண்டார். முருகன்  அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் திருப்பரங்குன்றம் எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2. திருச்செந்தூர்: முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.

3. பழநி: சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

4. சுவாமிமலை சிவகுருநாதர்: சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும் என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் சிவகுருநாதன் என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

5. திருத்தணி முருகன்: அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் தணிகை என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

6. சோலைமலை:அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது.  அவ்வைக்கிழவியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?, என்று  சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை  வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.

நினைத்த செயல் நடக்க முருகன் சந்நிதியில் இந்த பாடலை மூன்று முறை பாடினால் வெற்றி கிடைக்கும்.

சூரனை கடிந்த கதிர்வேலா
ஏம வெற்புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே!
தூமம் மெய்க்கும் அணிந்தசுக லீலா!
ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே!

27 நட்சத்திரங்களுக்கும் முருகன் பாட்டு: ராசிபலனை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பலர். பூர்வஜென்ம பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராசி மண்டலத்தில் அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் என்னும் நூலில், நட்சத்திர நாயகனான முருகப்பெருமானை வழிபாடு செய்யும் அன்பர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.

நாள் என்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள்என் செயும்
கொடுங்கூற்றென் செயும், குமரேசர்
இரு தாளும் (இரண்டு பாதங்கள்),
சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),
சதங்கையும் (இரண்டு சலங்கையும்),
தண்டையும் (இரண்டு தண்டைகள்),
சண்முகம் (ஆறு முகங்கள்)
தோளும் (12 தோள்கள்)
கடம்பும் (கடம்பு மாலை)
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
உறுப்பு மற்றும் அணிகலன்களான இருபத்தி ஏழும் நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. கந்தர் அலங்காரத்தில் இடம்பெறுள்ள இப்பாடலைப் பாடும்  அன்பர்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும்.

முருகப்பெருமான் பற்றிய சில துளிகள்: விதியை நிர்ணயிப்பவர் பிரம்மா. இவரின் கையெழுத்தே நம் தலையெழுத்தானது. இதனை மாற்றும் வலிமை முருகனின் திருவடிகளுக்கு உண்டு என்கிறார்  அருணகிரிநாதர்.

வேலுண்டு வினையில்லை என்று வேலின் சிறப்பை போற்றுவர். ஞானத்தின் அடையாளமாக வேல் திகழ்கிறது. கூர்மை மிக்க, ஆழ்ந்த, அகன்ற அறிவே வேலாயுதமாக முருகன் கையில் இருக்கிறது.

நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்பைக் கூறும் நூல். சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு, பன்னிருதிருமுறை ஆகிய  இரண்டு தொகுப்பிலும்  இந்நூல் இடம்பெற்றுள்ளது.

தமிழில் உயிரெழுத்து 12, மெய்யெழுத்து18 . இவை முப்பதையும் முதல் எழுத்தாகக் கொண்டு பாடப்பட்பட பாடல் சண்முக கவசம். மந்திரத்தன்மையை வெளிப்படுத்தும் இந்நூலைப் பாடியவர் பாம்பன் சுவாமிகள்.

முருகனின் அடியார்களில் ஒருவர் முருகம்மையார்.  இவருக்கு முருகபக்தி கூடாது என்று கணவர் கைகளை வெட்டினார். அப்போதும் முருக பக்தியை அவர் விடவில்லை. முருகன் அருளால் மீண்டும் கைகளை பெற்றார்.

முருகனின் அருள் வேண்டி அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். திரு என்றால் அழகு, ஐஸ்வர்யம். அழகனாகிய முருகனை புகழ்வதால், திருப்புகழ் என்று பெயர் ஏற்பட்டது.

முருகனுக்கு செவ்வேள் என்ற பெயருண்டு. வேள் என்றால் எல்லோராலும் விரும்பப்படுபவன். மன்மதனைக் கருவேள் என்றும், சிவந்த நிறம் கொண்ட முருகனைச் செவ்வேள் என்றும் கூறுவர்.

தைப்பூச நாளில் இறைவனோடு கலந்தவர் வள்ளலார். திருத்தணி முருகனை தரிசிக்கும் பேறு பெற்றார். சென்னை கந்தகோட்டம் முருகன் மீது இவர்
பாடிய கந்தக்கோட்டப்பதிகம் புகழ்மிக்கது.

பிரணவத்தை சிவனுக்கு உபதேசித்ததால் முருகன் தந்தைக்கு பாடம் சொன்ன தனயன் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.

பேசமுடியாத குழந்தையான குமரகுருபரர் பாடிய பாடல் கந்தர் கலி வெண்பா. இதனைப் பாடினால் வாக்கு வன்மை உண்டாகும்.

தினமும் அரைநிமிடமாவது முருகனை நினைக்க வேண்டும் என்று திருப்புகழில் அருணகிரிநாதர் வேண்டுகிறார்.

முருகனே, அகத்தியருக்கு தமிழ்மொழியை கற்றுக் கொடுத்தால் அவருக்கு தமிழ்க்கடவுள் என்ற சிறப்புப் பெயருண்டு.

முருகனுக்கு உரிய மலைக் கோயில்களை குன்றுதோறாடல் என்று பொதுவாகக் குறிப்பிடுவர்.

முருகனை குறிஞ்சிக் கடவுளாக தமிழ் இலக்கணம் கூறுகிறது. குறிஞ்சி என்பது மலையும், மலைசார்ந்த இடமும் ஆகும்.

முருகனின் வாகனங்களில் மயிலுக்கே முதலிடம் உண்டு. வேதமே மயிலாக இருந்து முருகனைத் தாங்குவதாகக் கூறுவர்.

தைப்பூசத்தன்று சிவனையும், முருகனையும் வழிபட காரியசித்தி ஏற்படும் என்று திருப்பரங்கிரிப் புராணம் கூறுகிறது.

பரிபாடலில் திருப்பரங் குன்றத்தை பற்றிய செய்திகள் உள்ளன. குறுந்தொகையில் முருகன் மீது கடவுள் வாழ்த்து உள்ளது.

முருகனுக்கு நட்சத்திரங்களால் உண்டான பெயர்கள் 2. அவை கார்த்திகேயன்,  விசாகன். விசாகம் முருகனின் ஜென்ம நட்சத்திரம்.

திருச்சி அருகேயுள்ள விராலிமலை முருகன் கோயிலில், முருகனுக்கு நைவேத்தியமாக சுருட்டு படைக்கப்படுகிறது.

திருவாரூர்- மயிலாடுதுறை வழியில் உள்ள திருவிற்குடி சிவாலயத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு முகமும், 4 கைகளும் உள்ளன.

காசநோயால் அவதிப்பட்ட ஆதிசங்கரர், திருச்செந்தூரில் சுப்ரமண்ய புஜங்கம் பாடலை பாடி குணமடைந்தார்.

முருகனுக்கு வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என கந்தபுராணம் கூறுகிறது.

முன் செய்த பழிக்குத் துணை முருகா எனும் நாமம் என்று  அருணகிரிநாதர் முருகநாமத்தின் பெருமையை போற்றுகிறார்.

பார்வதியின் பாதச் சிலம்பில் இருந்து விழுந்த ஒன்பது மணிகளே நவவீரர்கள் என்னும் முருகனின் படை வீரர்கள் ஆவர்.

சிவன் முதன்முதலாக தில்லையில் நடனமாடிய நாள். இறைவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலியும் கண்டு பேருவகையும் பெரும் பேறும் அடைந்தனர்.

முருகப் பெருமான், வள்ளித் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக இந்நாளில்தான் காட்சியளித்தார்.

ஸ்ரீரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய்க் கொடுப்பார்.

இராமலிங்க அடிகளார் ஸ்ரீமுக வருடம்(1874 ஆண்டு) தை மாதம் 19-ஆம் நாள் தைப் பூத தினத்தில் அருள் ஜோதியில் கலந்தார். ஆண்டுதோறும் தைப் பூச நன்னாளில் வடலூரில் ஜோதி தரிசனம் நிகழும். இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத் தினத்தில், ஆறு திரைகளை பாதியளவு நீக்கி, வள்ளலார் நிறுவிய நிலைக் கண்ணாடி முன்பு ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று தினத்தன்று மட்டுமே ஏழு திரைகளும் முழுமையாக நீக்கப்பட்டு அனைவரும் முழுமையாக ஜோதி தரிசனம் காண வழி செய்யப்படுகிறது. ஆசை, கோபம், பொறாமை போன்ற தீய குணங்கள், மனித நேயம் எனும் ஒப்பற்ற ஒளிவடிவை மறைத்துவிடுகின்றன. தீயவற்றை விலக்கி, தனக்குள் இருக்கும் ஒப்பற்ற ஜோதியைக் காண வேண்டும் என்பதை உணர்த்தும் வைபவமே தைப்பூச ஜோதி தரிசனம். மயிலாப்பூரில் வசித்த பூம்பாவை என்ற பெண்ணை திருஞான சம்பந்தர் அஸ்தி கலசத்திலிருந்து உயிர் மீட்டார்.

தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருகிறார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுவது மலேசியாவில் மட்டுமே. மயிலம் கோயிலில் முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பர்.

ஆய்குடி, ஹரிராம சுப்ரமணியர் ஆலயத்தில் தைமாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்ரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர் தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு பிரசித்தம்.

குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னியருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சியளித்தார்.

மாலையுடன் பாமாலையும் சூடுங்க!

தைப்பூச நாயகன் முருகனை வழிபட, பூமாலையுடன் மட்டுமல்ல!  இந்த பாமாலையையும் உங்களுடன் கொண்டு செல்லுங்கள். பக்தியோடு பாராயணம் செய்து வள்ளி மணாளனின் நல்லருள் பெறுங்கள்.

எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீ
சிந்தாகுல மானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண் ஆசையை மறக்க வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மயிலாய் போற்றி
முன்னிய கருணை ஆறுமுகப் பரம்பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே போற்றி

முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன் பன்னிருகை
கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில் வாழ்வே.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.

மருதமலை மாமணி: கோவையிலிருந்து 11 கி.மீ., தொலைவில் உள்ளது மருதமலை. இங்குள்ள முருகப்பெருமான் மருதாச்சலமூர்த்தி எனப்படுகிறார். மலையடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) உள்ளார். மலைப்பாதையின் நடுவில் இடும்பன் சந்நிதி உள்ளது. மலையின் மேலே பாம்பாட்டிச் சித்தர் குகையும், அவருக்கான சுனையும், மருத தீர்த்தமும் உள்ளன. நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்ட தீர்த்தம் இது. மூலஸ்தானத்தில் நான்கு அடி உயரத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். இவரைப் போற்றி அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ளார். ஆனந்தக்கூட்டம் என்னும் இனம் சார்ந்த மக்கள் இம்முருகனிடம் உத்தரவு கேட்காமல் எச்செயலும் செய்வதில்லை. இத்தலத்திற்கு அருகிலுள்ள வெள்ளியங்கிரி மலை சிவபெருமானாகவும், நீலிமலை அம்பிகை வடிவாகவும், இவ்விரு மலைகளுக்கு நடுவேயுள்ள மருதமலை முருகப்பெருமானாகவும் இருப்பதாக ஐதீகம். இவ்வாறு மலைகளின் அமைப்பே சோமாஸ்கந்த வடிவில் உள்ளது. கச்சியப்பமுனிவர் எழுதிய பேரூர் புராணத்திலும் இம்மலை பற்றிய குறிப்பு உள்ளது.

முருகனுக்கு முதல் கோயில்: முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கோயில் புதுக்கோட்டை அருகேயுள்ள ஒற்றைக்கண்ணூர் கோயில் என கூறப்படுவதுண்டு. இங்கு முருகன் ஒரு திருக்கரத்தில் ஜபமாலை ஏந்தியுள்ளார். மறுகரம் சின்முத்திரையுடன் உள்ளது. முருகப்பெருமானுக்கு வாகனமாக யானை உள்ளது. இந்த கோயில் முத லாம் ஆதித்த சோழனால்கட்டப்பட்டது.

மானசீக குருவாக இவரை ஏற்கலாம்: வெகுதொலைவில் இருந்தபடியே, திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், திசை நோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு முருகனே எடுத்துச்சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார்களில் முத்துச்சுவாமி தீட்சிதரும் ஒருவர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். திருத்தணி முருகன் சந்நிதியில் அமர்ந்து தியானித்த போது, முருகன் பாலகனாய், அவர் முன் தோன்றி கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை குருகுஹ என்று போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில் சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனையே மானசீக குருவாக ஏற்கலாம்.

வடசென்னிமலை பாலசுப்பிரமணியர்: சேலம் மாவட்டம் வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயிலில் பக்தர்கள் வீடு கட்டுவதற்காக வித்தியாசமான வழிபாடு செய்கிறார்கள். மலைக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதி இருக்கிறது. இதனருகே அவ்வைப்பாட்டி, முருகன் சிலைகள் உள்ளது. இங்கு பக்தர்கள் கற்களை அடுக்கி வைத்து சுவாமியை வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தங்களது வீடு கட்டும் கனவு நிறைவேறும் என நம்புகின்றனர். திருப்பதி மலை ஸ்ரீவாருபாதம் பகுதியில், இதேபோல கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பண்பொழி குமாரசாமி கோயில்:  திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகிலுள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் ( 12 கி.மீ.,) விசாக நட்சத்திரத்தில் பிறந்தோருக்கான பரிகாரத்தலம். வி என்றால் மேலான, சாகம் என்றால் ஜோதி, விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்று மூன்று வகையான ஒளிக்கிரணங்களை உடையது. இந்த கிரணங்கள் இம்மலையில் படுவதால், இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவசியம் தரிசிக்க வேண்டும். 500 அடி உயரத்தில், 544 படிகளுடன் அமைந்த குன்றுக்கோயில் இது. மலைக்குச் செல்ல வாகன வசதி உள்ளது. விசாகம், கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முற்காலத்தில் இந்த நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்களது முழு ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் ஓட வள்ளி, நளமூலிகை, திருமலைச்செடி ஆகிய மூலிகைகள் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக திருமலைச் செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் சேர்த்து, முருகனுக்கு பூஜித்திருக்கிறார்கள். இத்தல முருகனை, தன் மகனாக ஏற்றுக் கொண்ட சிவகாமி பரதேசி அம்மையார் என்பவர், மலைஅடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் கற்களை வைத்து இழுத்துச் சென்று மலையுச்சியில் மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார்.

கதிர்காமம் கதிரேசன்: முருகப்பெருமானின் திருத்தலங்களில் கதிர்காமத்திற்கு சிறப்பிடம் உண்டு. இப்பெருமான் கதிரேசன் என்று அன்புடன் அனைவராலும் போற்றப்படுகிறார். கொழும்பிலிருந்து 230 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. கருவறையில் எவ்வடிவில் இறைவன் இருக்கிறான் என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. சந்நிதியின் திருக்கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் திரையில் மயில் மீது இருதேவியருடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் உள்ளது. இதைப்போன்று மேலும் பல திரைச்சீலைகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இப்பெருமானின் சந்நிதி திறக்கப்படுகிறது. மற்ற காலங்களில் திரையிட்டே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடி உற்சவம் பிரபலமானது. ஆடி அமாவாசையன்று ஆரம்பித்து பவுர்ணமியில் தீர்த்தவாரி நடைபெறும். தினமும் யானைமீது ஊர்வலமாக ஒருபெட்டி எடுத்துச் செல்லப்படும். அந்த பெட்டிக்குள் முருகனுக்குரிய யந்திரம் இருக்கிறது. இக்கோயிலின் பின்னால் உள்ள அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகிறார்கள். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடுவது மத ஒற்றுமைக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

இலஞ்சி வரதராஜகுமாரன்: காஷ்யபர், கபிலர், துர்வாசர் ஆகிய முனிவர்களிடையே பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களில் யார் சிறந்த கடவுள் என்று அறிவதென ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு வேண்டி முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தனர். தானே ஆதிபரம்பொருள் என்பதையும், படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களையும் தானே முன்னின்று நடத்துவதையும் அவர்களுக்கு உணர்த்தினார். இப்பெருமானே இலஞ்சி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு வரதராஜகுமாரன் என்று பெயர். மூன்று முனிவர் களுக்கும் முருகன் அருளிய நிகழ்ச்சியின் அடிப்படையில் ஐப்பசி மாத சஷ்டி விழாவின் போது முதல்நாள் படைக்கும் தொழில் புரியும் பிரம்மனாகவும், இரண்டாம் நாள் காக்கும் தொழில்புரியும் விஷ்ணுவாகவும், மூன்றாம் நாள் அழித்தல் தெழில் புரியும் ருத்ரனாகவும், நான்காம் நாள் மறைத்தல் தொழில் புரியும் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் அருளல் தொழில்புரியும் சதாசிவமாகவும் வந்து தரிசனம் தருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே இலஞ்சி அமைந்துள்ளது. இலஞ்சி என்றால் நீர்நிலை, அருள், செல்வம் என்று பொருள். நீரினைப் போல குளிர்ச்சியாக அடியவர் வேண்டிய வரங்களை அருள் வழங்கும் கலியுகவரதனாக முருகப்பெருமான் இலஞ்சியில் வீற்றிருக்கிறார்.

ஆட்டுக்கிடா முருகன்: முருகனுக்கு மயிலுடன் ஆட்டுக்கிடாவும் சில கோயில்களில் வாகனமாக இருக்கிறது. நாரதர் செய்த வேள்வியில் இருந்து ஆட்டுக்கிடா வடிவில் ஒரு அசுரன் தோன்றினான். அதை அடக்கும் சக்தி யாருக்கும் இல்லை. முருகப்பெருமான் கிடாவை அடக்க, தன் சேனைத்தலைவர் வீரபாகுவை அனுப்பினார். வீரபாகு அதை அடக்கி, முருகனிடம் ஒப்படைத்தார். முருகன் அதை தன் வாகனமாக்கிக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் விழாவில், முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி வருவார்.

படைவீடு இதுதான்: ஆறுமுகன் குடிகொண்டிருக்கும் ஆறு தலங்களையும் அறுபடைவீடு என்கிறோம். இதில் படைவீடு என்பது திருச்செந்தூர் தலத்தையே குறிக்கிறது. அரசன், தன் படையாட்களுடன் தங்கியிருக்கும் இடத்தை, படைவீடு என்பர். அதுபோல அசுரனை அழிக்க முருகப்பெருமான், தன் படைகளுடன் திருச்செந்தூரில் தங்கியிருந்தார். எனவே இத்தலமே ஆரம்ப காலத்தில் படைவீடு என்றழைக்கப்பட்டது. பிற்காலத்தில் வீரத்தின் சின்னமாக இருந்த முருகன் குடி கொண்டுஇருக்கும் அனைத்து தலங்களையும் படைவீடாக அழைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. படைவீடு என்றால் குன்று என்றொரு பொருள் உண்டு. எனவே குன்றில் குடியிருக்கும் முருகனின் தலங்களுக்கு இப்பெயர் வந்ததாகவும் கருதலாம்.

நாகசுப்ரமணியர்: தேனி மாவட்டம் கோடங்கிபட்டி தீர்த்தத்தொட்டியில் உள்ள விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோயிலில் நாக சுப்பிரமணியர் இருக்கிறார். கருவறையில் மூலவருக்கு அருகில் சிறிய மூர்த்தியாக நாகத்தின் மத்தியில் வலதுபுறம் திரும்பிய மயிலுடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். விசேஷ காலங்களில் இவ்விரு சுவாமிகளுக்கும் சந்தனம், அரிசிமாவு காப்பு அலங்காரம் செய்கின்றனர். கோயிலுக்கு அடியில் தீர்த்தம் என்றும் வற்றாமல் எப்போதும் சுரந்தபடி இருக்கிறது. இதன் பெயராலேயே இத்தலம் தீர்த்தத் தொட்டி என பெயர் பெற்றிருக்கிறது.
இவரை வழிபட்டவர்க்கு மனதில் நினைத்தது நடந்தேறும்.

நள்ளிரவு பூஜை; நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக் குமாரர் உற்சவராக இருக்கிறார். இவர், தாரகாசுரனை அழித்தபோது, காயம் பட்ட தனது படைவீரர்களுக்கு வைத்தீஸ்வரனாக இருக்கும் தன் தந்தையிடம் வைத்தியம் செய்து கொள்ள வந்ததாக வரலாறு. இவருக்கு நள்ளிரவு நேரத்தில் பாதத்தில் சந்தனம் பூசி, புனுகு, பச்சைக் கற்பூரம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பால் அன்ன நைவேத்யம் படைத்து பூஜை செய்கின்றனர். அசுரனை அழிக்க போர் செய்ததால் கோபத்துடன் இருக்கும் முருகனை சாந்தம் செய் வதற்காக இந்த அபிஷேகங்களை செய்வதாக சொல்கிறார்கள்.

வள்ளி அவதரித்த தலம்: சித்தூர் (ஆந்திரா).  இந்த பகுதியை ஆட்சி செய்த வேடர் தலைவன் நம்பிராஜனின் மகளாக வளர்ந்தாள். முருகனும், வள்ளியும் திருத்தணியில் காதல்மணம் செய்து கொண்டனர்.

தைப்பூச விழா சிறப்பு: தைப்பூசத்திருவிழா, ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் பிரசித்தி பெற்ற விழாவாக உள்ளது. இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை (பார்வதி) கைலாசநாதருடன் (சிவன்) தனிக்கோயிலில் அருளுகிறாள். இவர்களது சந்நிதியின் நடுவில் முருகன் சந்நிதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சந்நிதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சந்நிதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை முக்கிய தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். காலப்போக்கில் மலைக்கோயில் முருகன் பிரபலமாகவே, முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது. ஆனாலும், பழமை மாறாமல் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. தைப்பூசக் கொடியேற்றம் இங்கு தான் நடக்கும். விழாவின்போது, இக்கோயிலில் உற்சவர் முத்துக்குமாரசுவாமி (முருகன்) தினமும் எழுந்தருளுவார். விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு வீதியுலா செல்கிறது.

ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் பங்குதாரராக பழநி முருகனை கருதுகின்றனர். தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்து விடுகின்றனர். தைப்பூச விழா மற்றும் புதுக்கணக்கு ஆரம்பிக்கும் சமயங்களில் ஏராளமாக குவிகின்றனர்.

கந்தன் என்னும் கருணாமூர்த்தி: வேதத்துக்கு முக்கியமென்ன? அக்னி உபாசனை! சுப்ரமண்யர், அக்னி ஸ்வரூபமாயிருப்பவர். பரமேச்வரனின் நேத்ராக்னிப் பொறி ஆறு சேர்ந்து, அவராக ஆனது. அதனால் தான் அவர் வேத தேவராக இருக்கிறார். வேதம் படிப்பதும், சொல்லிக் கொடுப்பதுமே தொழிலாயுள்ள அந்தணர்களின் தெய்வமாய் இருப்பவர் சுப்ரமண்யர். ஆசார்யாளும் (ஆதிசங்கரர்) சுப்ரஹ்மண்ய புஜங்கத்தில் மஹீதேவ தேவம், மஹாதேவ பாவம், மஹாதேவ பாலம் என்று சொல்லியிருக்கிறார். தமிழிலுள்ள பக்தி நூல்களில் ரொம்பவும் புராதனமான திருமுருகாற்றுப்படையிலும் இப்படியே தான் சொல்லியிருக்கிறது. சண்முகனின் ஆறு முகங்களில், ஒவ்வொன்றும் ஒருவிதமாக அனுக்ரஹம் செய்வதாக நக்கீரர் சொல்லிக் கொண்டு போகும்போது, இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். சுப்ரமண்ய ஸ்வாமி என்பதே குமாரசுவாமிக்கு பிரசித்த நாமாவாக இருப்பதிலிருந்தே, அவர் வேதத்துக்கும், வைதிகத்துக்கும் அதிதேவதை என்று நிச்சயமாகிறது. பரமேச்வரன் மன்மதனை பஸ்மம் பண்ணினவர். எந்த நேத்ராக்னியினாலே(நெற்றிக்கண்ணாலே) மதனைப் பொசிக்கினாரோ, அதே நேத்ராக்னியில் உண்டானவர் சுப்ரஹ்மண்யர். காமத்திலே பிறக்காமல் ஞானத்திலே பிறந்தவர். ஞானமே லோகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்று கருணாமூர்த்தி ஸ்வரூபமாக விளங்குகிறார்.
-சொல்கிறார் காஞ்சிபெரியவர்

கொண்டைச் சேவல் கூவும் நேரம்:  கீழ்வானில் சூரியன் உதிக்கும் முன்னே சேவல் விடியலை நமக்கு அறிவிக்கிறது. இது, வாழ்வு என்னும் அறியாமை தூக்கத்தில் நாம் இருப்பதையும், அது தற்காலிகமானது என்பதையும், இந்த உலகம் வாடகை வீடு என்னும் விழிப்பு நிலையைப் பெற வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. முருகப்பெருமானும் சூரபத்மனும் போரிடும் போது, சூரன் மாயசக்தியினால் மாமரமாகி நின்றான். முருகன் தன் வேலினால் மரத்தை இரண்டு கூறாகப் பிளந்தார். ஒருபுறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றார். தான் என்ற எண்ணம் தான் மாமரம். இந்த மாமரத்தை வேல் பிளந்தது போல், ஞானத்தால் நம்மை அறிந்தால் கடவுள் நிலையை அடையலாம். கொக்கு என்றால் மாமரம் என்றும் பொருளுண்டு. சேவல் கொக்கரக்கோ என்று கூவும். இதை கொக்கு+அறு+கோ என்று பிரிப்பர். சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனாகிய முருகனே! என்று சேவல் கூவுவதாகச் சொல்வர்.

குழந்தை முருகனின் மயில் எது?

மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை முருகன் வேலால் பிளந்ததும் ஒருபாதி மயிலாகவும், மற்றொரு பாதி சேவலாகவும் மாறியது. அந்த மயில் முருகனின் வாகனமானது. ஆனால், குழந்தை முருகன் பவனி வரும் மயில் இந்திரனால் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு அழியா அறிவு: முருகப்பெருமானின் நான்காம் படைவீடு சுவாமிமலை. இங்கு 60 படிகள் உள்ளன. இவை பிரபவ முதல் அட்சய முடிய உள்ள 60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும். இந்த கருத்தைச் சொன்னவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. தந்தைக்கு மந்திரத்தின் பொருள் சொன்ன முருகன் வாழும் தலம்
என்பதால், மாணவர்கள் இத்தலத்து முருகனை வணங்கி, அழியா அறிவைப் பெறலாம்.

மூன்று வேளையும் பூத்த அதிசயம்: முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடு திருத்தணி. திருப்பாற் கடலை கடைந்த போது கயிறாக இருந்த வாசுகியின் உடல் புண்ணானது. இந்த புண்ணை போக்க, திருத்தணி வந்து முருகனை வழிபட்டு, அங்கிருந்த சுனையில் குளித்தது. நோய் நீங்கபெற்று வைகுண்டம் சென்றது. இத்தலத்தில் இருந்த ஒரு கொடியில், காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளையும், தப்பாமல் பூக்கள் பூத்ததாம். அந்தப் புதிய மலர்களை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை நடந்திருக்கிறது.

கல்வி தரும் முருகன்: திருநள்ளாறு கோயில் பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் தனிசந்நிதியில் மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவர் வலது கையை அபய ஹஸ்தமாகவும், இடது கையில் ஞானப்பழத்தை ஏந்தியும் உள்ளது. காலில் பாதரட்சையுடன் இருக்கும் இவரை வழிபட்டவர்க்கு வெற்றி கிடைக்கும் என திருப்புகழில் பாடியுள்ளார். கல்வி பயிலும் மாணவர்கள், தொழில் தொடங்குபவர்கள் தங்களின் முயற்சி வெற்றி பெற இவரை வழிபடுகின்றனர்.

சூரிய, சந்திரர் காணாத இடம்: சூரியக்கதிர்களும், சந்திர ஒளியும் பூமியில் படாத இடம் ஒன்று இருக்கிறதா? ஆம்...இருக்கிறது! அதுதான் முருகனின் மனைவி வள்ளி பிறந்த வள்ளிமலை. இந்த கோயிலில் சுனை ஒன்று உள்ளது. இதில் ஒளியே பட்டதில்லை. இதில் தான் வள்ளி நீராடினாள். மன அமைதி தரும் இத்தலத்தில் ஒரு முறை வணங்கினால், கோடி முறை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

முருகன் கையில் அருணகிரி: மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப் போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். பிரபுடதேவராயன் என்னும் மன்னன்மூலமாக, அருணகிரிநாதரை தேவலோகம் சென்று பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிடச் செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தினார். உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அந்தக் கிளியை தண்டத்தில் அமர்த்திக் கொண்டார்.

பிரணவேஸ்வரர்: கும்பகோணம் அருகில் உள்ள திருப்பேணுபெருந்துறையில் திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் கோயிலில் உள்ள முருகனுக்கு பிரணவேஸ்வரர் என்று பெயர். சிவன் எல்லாம் அறிந்தவராக இருக்க, பிள்ளையாகிய தான் தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி முருகன் வருத்தம் கொண்டார். எனவே, இத்தலத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்தார். அவருக்கு சிவனும் காட்சி அளித்து, நீயும் நானும் ஒன்றே எனக்கூறி அருள் புரிந்தார். பிரணவேஸ்வரர் என்ற பெயருடன் இருக்கும் இந்த முருகனை பேசுவதில் சிரமம் கொண்ட திக்குவாய் கொண்டவர்கள் வழிபட நன்மை உண்டாகும்.

மலையில் அங்கபிரதட்சணம்: மதுரை இருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ளது வெள்ளி மலை. இங்கு உள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தின் அடியில் வேல் மட்டும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு, அதன்பின் இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் பாறையில் அங்க பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு வேண்டிக் கொண்டால் ஆணவம் நீங்கி பணிவு உண்டாகும் என்பது நம்பிக்கை.

அகத்தியரின் ஆசிரியர்: முருகப்பெருமானை குருவாக பெற்றவர் அகத்தியர். இவருக்கு தமிழ்நாட்டை முருகப்பெருமான் கொடுத்ததாகவும், அதனை அவர் பாண்டிய மன்னர்களுக்கு கொடுத்ததாகவும் திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. நைமிசாரயணத்தில் வசித்த அகத்தியர் தென்னகம் வந்து பொதிகை மலையில் தங்கினார் என்பர். புராணத்தின் கதையின்படி, சிவபார்வதி திருமணத்தின்போது உயிர்கள் அனைத்தும் வடபுலத்தில் ஒன்றுகூடியதால், பூபாரம் தாளாமல் பூமி தாழ்ந்தது. அதனைச் சமப்படுத்த அகத்தியர் தெற்குநோக்கி வந்தார். பொதிகைமலையில் தன் இஷ்டதெய்வமான முருகனை தியானித்தார். ஒருநாள் தெய்வீக மணம் அவரைச் சூழ்ந்தது. கண்விழித்துப் பார்த்தால் எதிரில் குமரக்கடவுள் காட்சிஅளித்தார். குருவாக இருந்து தமிழ் இலக்கணத்தை போதித்தார். அதனைக் கொண்டு, அகத்தியம்என்னும் இலக்கண நூலை எழுதினார். பொதிகைமலையில் இருக்கும் அருவிக்கும் அகத்தியர் அருவி என்றே பெயர் ஏற்பட்டது. அருவியின் அருகில் முருகனும், அகத்தியரும் தனித்தனி சந்நிதிகளில் கோயில் கொண்டு உள்ளனர்.

ஆறுமுகம், ஆறுகை: கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகன் கார்த்திகேயன் ஆனார். ஸ்ரீ தத்துவ நிதி என்ற நூலில் வித்தியாசமான தகவல் உள்ளது. முருகன் ஆறுமுகம், ஆறுகைகள் உடையவரே என்பது அது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம், ஐராவதேசுவரர் கோயிலிலும் உள்ள கார்த்திகேயர் வடிவங்கள் அழகு வாய்ந்தவை.

சங்கடம் தீர்க்கும் சகி: கவிஞர்கள் காதலைப்பற்றி கவிதை எழுதும் போது சகியே என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவர். இதற்கு தோழியே என்பது பொருளாகும். வடமொழியில் சகி என்பதற்கு மயில் எனப் பொருள். மயிலில் எழுந்தருளும் முருகனுக்கு சகி வாகனர் என்று பெயர்.

மவுனமந்திரம்: ஓம் சிவாய நம, ஓம் சக்தி, ஓம் காளி, ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் நமோ நாராயணா என்று தெய்வங்களுக்கு முன்னால் ஓம் என்ற அடைமொழியை இடுகிறோம். இந்த மந்திரம் இறைவனால் உலக உயிர்களுக்கு தரப்பட்டது. ஓம் எனச் சொல்லிப்பாருங்கள், இந்த மந்திரத்தை ஓ என துவக்கும் போது வாய் சற்று திறக்கிறது. ம் என்றதும் முடிவிடுகிறது. மனிதா! நீ வாயைத் திறக்கப் போகிறாய். நீ பேசுவது நல்ல வார்த்தையாய், அமைதியை உருவாக்கக் கூடியதாய் இருக்கட்டும். கோபப்பட்டு பேசிவிடாதே என்று எச்சரிக்கை செய்கிறது. இம்மந்திரம், இன்னொரு வகையில் கண்டதையும் சாப்பிடாதே என்றும், நாக்கு ருசிக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதையும் ஓம் நமக்கு உணர்த்துகிறது. இந்த மந்திரம் நமது வாயே நமக்கு எதிரி என்பதை புரிய வைக்கிறது. இதனால் தான், இதற்குரிய பொருளைக் கூட முருகப் பெருமான் ரகசியமாக தந்தையின் காதில் மெதுவாகச் சொல்லியிருக்கிறார். எனவே, இந்த மந்திரத்தை மவுன மந்திரம் என்பர்.

கழுத்தை சாய்த்த வள்ளி: முருகனுடன் இருக்கும் வள்ளி தன் கழுத்தை சற்றே வலப்புறம் சாய்த்தபடி கோவை மாவட்டம், பெரியகளந்தை ஆதீஸ்வரர் கோயிலில் அருளுகிறாள். இதனை, கணவனான முருகன் சொல்வதை வள்ளி காதுகொடுத்து கேட்ட கோலம் என்கிறார்கள். அருணகிரியார் இத்தலத்தை குழந்தை நகர் என்று பாடியுள்ளார்.

கங்கையின் பிள்ளை: காங்கேயன் என்ற பெயர் முருகனுக்கு உண்டு. கங்கையின் மைந்தன் என்று பொருள். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய பொறி கங்கை வடிவான சரவணப்பொய்கையில் விழுந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

நான்கு வாகனம்: முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும் திருமால் கொடுத்த யானை, சேவல் மற்றும் ஆடு ஆகியவையும் அவரது வாகனங்களாக இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங்களையும் காணலாம். திருவிழாக்காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருள்கிறார்.

சரவணப்பொய்கை: சரவணன் என்பது வடமொழிச் சொல். இது சரவனம் என்ற சொல்லில் இருந்து திரிந்தது. சரவனம் என்றால் நாணல் காடு என்பது பொருள். முருகனை நாணல் போல் வளைந்து பணிவுடன் வணங்கினால் துன்பம் ஏதும் நெருங்காது என்பது தத்துவம். நாணல் காட்டிலுள்ள குளத்தில் பிறந்தவன் சரவணன் என்பது சரியான பொருள்.

குன்றுதோறாடல்: முருகனின் ஆறுபடை வீடுகளில் திருத்தணிக்கு குன்றுதோறாடல் என்ற புராணப் பெயர் இருக்கிறது. ஆனால், மலையும், மலை சார்ந்த பகுதியில் இருக்கும் எல்லா முருகன் கோயில்களையும் குன்று தோறாடல் என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடுகிறார். அவ்வகையில் தமிழகத்தில் சுருளிமலை (தேனி), இலஞ்சி (திருநெல்வேலி) குன்றக்குடி, விராலிமலை, வயலூர் போன்ற மலைக்கோயில்களும் குன்றுதோறாடல் என்பதில் அடங்கும்.

ஐயர் ஐயன்: முருகப்பெருமானுக்கு ஐயர் ஐயன் என்று ஒரு பெயர் இருப்பதாக திருப்புகழ் சொல்கிறது. ஐ என்றால் இறைவன் என்று பொருள். இந்த எழுத்து முன்றெழுத்துக்களை உள்ளடக்கியது. இதிலுள்ள முதல் சுழி அ என்ற எழுத்தையும், இடையிலுள்ள வளைந்த கோடு இ என்ற எழுத்தையும், அடியில் உள்ள வளைவு ய எழுத்தையும் குறிக்கும். இவற்றை அகரம், இகரம், யகரம் என்பர். இதில் அகரம் இறைவனையும், இகரம்  பசு உயிர்களையும், யகரம் பாசத்தையும் (உலகப்பற்று) குறிக்கும் பசுவாகிய உலக உயிர்கள் பாசம் என்ற கட்டில்இருந்து விடுபட்டால் இறைவனை அடையலாம் என்பது இந்த எழுத்தின் சாராம்சம். ஐயர் என்றால் முனிவர் என்றும், ஐயன் என்றால் தலைவன் என்றும் பொருள்உண்டு. முனிவர்களின் தலைவனாக விளங்குபவன் முருகன் என்பதால் ஐயர் ஐயன் என அருணகிரிநாதர் அழைத்தார்.

பெரிய துரை இவர்தான்: திருப்புகழ் சுவாமிகள் என போற்றப்பட்டவர் வள்ளிமலை சுவாமி. இவர் வயிற்றுநோயால் அவதிப்பட்ட போது,  திருப்புகழை பாடி முருகனருளால் நோய் நீங்கப்பெற்றார். முருகனின் தீவிர பக்தரான இவர் ஏற்படுத்திய விழாவே திருத்தணியில் படிவிழாவாக ஆங்கிலப் புத்தாண்டில் நடைபெற்று வருகிறது.
 நூறாண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த தணிகைமணி செங்கல்வராயர் என்பவர் தன் வீட்டில்  பக்தர்களோடு சேர்ந்து திருப்புகழை பாடுவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார். முருக பக்தர்கள் ஒன்று கூடி திருப்புகழ் பாடும் விஷயம் அறிந்த வள்ளிமலைசுவாமி மகிழ்ந்தார். அந்த சமயத்தில் நம் நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலப் புத்தாண்டில்  அதிகாரிகளை மகிழ்விக்க ஊழியர்கள் பரிசுப் பொருள்களுடன் சென்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இதை மாற்ற வேண்டும் என்று வள்ளிமலை சுவாமி சிந்தித்தார். துரைக்கெல்லாம் துரையான முருகனை நாடிச் செல்ல முடிவெடுத்தார். செங்கல்வராயர் வீட்டில் பாடும் அடியார்களுடன் சேர்ந்து புத்தாண்டு நாளில் திருத்தணிக்கு கிளம்பினார். நாளடைவில் பக்தர் கூட்டம் பெருகியது. திருத்தணி திருப்புகழ் திருவிழா என்றானது. காலப்போக்கில் இந்த விழா படிவிழா என்று பெயர் பெற்றது. மலைக்குச் செல்ல 365 படிகள் உள்ளன. ஒரு ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும் விதத்தில் இப்படிகளின் எண்ணிக்கை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. துரை முருகனை வழிபட ஆண்டு முழுவதும் நன்மை உண்டாகும் என்ற அடிப்படையில் விழா நடக்கிறது. இந்த விழா இப்போதும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !