உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்ரமணியர் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது

மருதமலை சுப்ரமணியர் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது

கோவை : மருதமலை சுப்ரமணிய சுவாமி தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது; திருக்கல்யாண உற்சவம், திருத்தேர் வடம் பிடித்தல் வரும் 7ம் தேதி நடக்கிறது. முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக, மருதமலை கருதப்படுகிறது. இங்கு தைப்பூச தேர் திருவிழா,நேற்று துவங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு விநாயகர் பூஜை மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு, கிருத்திகை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, ஹோம உற்சவம் நடந்தது. பின், வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா வந்தார். மாலையிலும், சுவாமி ஊர்வலம் நடந்தது. இன்று முதல் 5ம் தேதி வரை, காலை மற்றும் மாலையில், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும் 6ம் தேதி மாலை, தங்க மயில் வாகன காட்சி, சந்தனக்காப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தைப்பூச திருக்கல்யாண உற்சவம் 7ம் தேதி காலை 10.30 மணிக்கும், மாலை 6.00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 8ம் தேதி மாலை 5.00 மணிக்கு ஊஞ்சல் குதிரை வாகனம் மற்றும் தெப்பத்திருவிழா இடம்பெறுகின்றன. 9ம் தேதி மாலை கொடி இறக்கப்படுகிறது. 10ம் தேதி காலை, வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், துணை ஆணையர் வீரபத்திரன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !