ஆத்தூரில் 7 கல்வெட்டுகளை கண்டுபிடித்த வரலாற்று குழு
ஆத்தூர்: சோழர் காலம் உள்பட ஏழு கல்வெட்டுகளை, வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்தனர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே, ரெட்டாக்குறிச்சியில், கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பொன்.வெங்கடேசன் குழுவினர், கடந்த, 1ல், ஆய்வு செய்தனர். அப்போது, வானகாத்தவநாதர் எனும் சிவன் கோவிலில் நான்கு கல்வெட்டு கள், மாரியம்மன் கோவில் முன், மூன்று கல்வெட்டுகளை கண்டுபிடித்தனர். இதில், மூன்று கல்வெட்டு சோழர்காலம், நான்கு கல்வெட்டு, 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இதுகுறித்து, ஆய்வு குழுவினர் கூறியதாவது: சிவன் கோவில் கருவறை சுவரில், சோழர்கால மூன்று கல்வெட்டுகள் உள்ளன. கருவறையின் மேற்கு சுவரில் விஷ்ணுவுக்கு அருகில், கி.பி., 921ல், முதலாம் பராந்தகசோழனின், 14ம் ஆண்டு ஆட்சிக்கால கல்வெட்டு உள்ளது.
ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு பதினாலாவது என, கல்வெட்டு தொடங்கு கிறது. உறத்தூர் திருசோமீசுவரதாண்டார் கோவிலுக்கு, சென்னப்பேரணியர், அவரது மனைவி றன்னிச்சி, மகள் தேவி என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது கல்வெட்டில், முதலாம் ராஜராஜசோழனின் மெய்க்கீர்த்தி என உள்ளது. மூன்றாவது கல்வெட்டில், கிரந்தமொழியில், ஸ்வஸ்திஸ்ரீ என தொடங்குகிறது.
இவை, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நான்காம் கல்வெட்டு, 17ம் நூற்றாண்டை சேர்ந்தவை. அதில், வானகாத்தவநாதர், இந்த ஊர் இரட்டைக்குறிச்சி என குறிப்பிட்டுள்ளது. அதேபோல், மாரியம்மன் கோவில் எதிரே, மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதல் கல்வெட்டில், தீத்த சூரப்ப வாண்டையார், காளத்தீஸ்வரர் என்ற கோவிலுக்கு நிலம் தானம் வழங்கியுள்ளார். இரண்டாவது கல்வெட்டு, மூன்று புறம் சூலம் பொறித்து, கிழக்கு பகுதியில் சூரியன் சந்திரன் உள்ளது. சூலங்கள் சிவன் கோவிலுக்கு எல்லைக்கல். தம்பிரான் கோவில் திருப்பணிக்கு, இரட்டைக்குறிச்சி கிராமத்தை தானமாக வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.