ஊருக்குள் புகுந்த நாகபாம்பு பூஜை செய்த கிராம மக்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த நாகப்பாம்புக்கு, பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், மூன்று அடி நீளமுள்ள விஷதன்மை மிகுந்த நாகப்பாம்பு இருப்பதை பார்த்துள்ளனர். சிலர் அந்த பாம்பை அடிக்க முயன்றனர். ஆனால், பாம்பு எங்கும் செல்லாமல், ஒரே இடத்தில் படம் எடுத்து நின்றது. தப்பி ஓடாமல் பாம்பு அங்கேயே படம் எடுத்து நின்றதால், பொதுமக்கள், பாம்புக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தகவல் அறிந்த வேட்டியம்பட்டி, காமராஜர் நகர், தொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்களும் பெத்தனப்பள்ளிக்கு வந்து பாம்புக்கு பூஜை செய்தனர்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பதில் நிபுணரான கணபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நாகப்பாம்மை மீட்டு, அருகில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.