வேகவதி நதிக்கரையில் 15 ம் நுாற்றாண்டு நடுகல்: பொதுமக்கள் வழிபாடு
காஞ்சிபுரம் வேகவதி நதிக்கரையோரம், 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, போர்வீரன், அவரது மனைவியின் உருவம் பொறித்த நடுகல்லுக்கு, பொது மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஒரு நாட்டின் மீது படையெடுத்து வரும் எதிரிகளிடமும், கொடிய விலங்குகளிடமும் போரிட்டு, வீர மரணம் அடைந்தோருக்கு, கல் வைத்து வணங்கும் வழக்கம், பழங்காலத்தில் இருந்தது. அந்த கல்லில், கையில் வாளுடன் கூடிய உருவம் பொறிக்கப்படும்; அவை, நடுகல் என, அழைக்கப்படுகிறது. அதன்படி, காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் இருந்து, அச்சுகட்டி தெரு எனப்படும், தும்பவனம் தெரு வழியாக சென்று, வேகவதி ஆற்று சிறுபாலத்தை கடந்தவுடன், நாகலுாத்து மந்தைவெளி தெரு உள்ளது. இத்தெருவில், விநாயகர் கோவில் அருகே, வலது புறம் ஓரத்தில், தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில், நடுகல் உள்ளது. இப்பகுதி மக்கள், இச்சிலையை கன்னியம்மன் என வழிபடுகின்றனர்.
இது குறித்து, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், சு.உமாசங்கர் கூறியதாவது: இந்த சிலை, 15ம் நுாற்றாண்டை சார்ந்தது. இது வீரர்களுக்கான நடுகல். அக்காலத்தில், போர்படை தலைவன், தளபதி அல்லது வீரன் ஒருவர் போரில் வீரமரணம் அடைந்துள்ளார். இறந்தவரின் சிதை தீயில், இறங்கிய அவரது மனைவி, தன் உயிரை மாய்த்துக்கொண்டதால், அவர்களது நினைவு சின்னமாக, இருவரது உருவம் பொறித்த சிலை அமைத்து வழிபட்டுள்ளனர். இச்சிலையில் உள்ள வீரனின் வலது கையில் போர்வாள், இடது கையில் வில் ஏந்திய நிலையில் உள்ளதை காணலாம். அதே போல் பெண் உருவம், தீக்குளித்ததின் நினைவாக பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.