புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
திருப்புத்துார்:முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருப்புத்துார், திருக்கோஷ்டியூர், கொங்கரத்தி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் காலை 7:00 மணிக்கு சயனகோலத்தில் உள்ள மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் ஸ்ரீதேவி,பூதேவியருடன் ராஜ அலங்காரத்தில் திருமாமணி மண்டபம் எழுந்தருளினார். பின்னர் உலக நன்மை வேண்டி சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்ஸவர் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் பெருமாள் புறப்பாடு நடந்தது. கொங்கரத்தி வன்புகழ்நாராயணன் பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் வருகை துவங்கியது. காலை மூலவருக்கு அபிேஷகம் நடந்தது தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யோக நிலையில் உள்ள பெருமாள், வெளியாத்துாரில் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் உள்ள பூமீநீளா சமேத பெருமாளையும் பக்தர்கள் தரிசித்தனர்.*அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பெருமாள் அலர்மேல் மங்கை தாயாருடன் தங்க அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரைக்குடி, மாத்துார், கண்டனுார், மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.