உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் 36 ஆயிரம் கோவிலுக்கு வெறும் 600 செயல் அலுவலர்களா

சென்னையில் 36 ஆயிரம் கோவிலுக்கு வெறும் 600 செயல் அலுவலர்களா

சென்னை: சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வராததாலும், போதுமான பணியாளர்களை நியமிக்காததாலும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், அவற்றின் சொத்துகள் பராமரிப்பின்றி சீரழிந்து வருகின்றன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து, 606 கோவில்கள், 56 திருமடங்கள், 57 திருமடத்துடன் இணைந்த கோவில்கள், 1,910 அறக்கட்டளைகள், 17 சமணக் கோவில்கள் உள்ளன.

இக்கோவில்களை நிர்வகிக்க செயல் அலுவலர் பணியிடங்கள் பல்வேறு நிலைகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி 11 இணை ஆணையர்; ஒன்பது துணை ஆணையர்; 27 உதவி ஆணையர் மற்றும் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என மொத்தம் 628 செயல் அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் பாதி பணியிட ங்கள்  தற்போது காலியாக உள்ளன. ஒவ்வொரு செயல் அலுவலரும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்வகிக்க வேண்டி உள்ளது.

பராமரிப்பு இல்லை : ஒரு நாளைக்கு ஒரு கோவில் பணி என்றாலும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா கோவில்களுக்கும் ஒரு மாதத்தில் சென்று வர முடியாத நிலை உள்ளது. இதன்
காரணமாக கோவிலையும், அதன் சொத்துகளையும் முறையாக பராமரிக்க முடிவதில்லை. மேலும் அறநிலையத் துறை சட்ட விதிகளை துறை அதிகாரிகளே பின்பற்றுவதில்லை. உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள கோவில்களுக்கு நான்காம் நிலை செயல் அலுவலர்; ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் என்றால் மூன்றாம் நிலை; ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் வரை என்றால் இரண்டாம் நிலை செயல் அலுவலரை நியமிக்க வேண்டும். பத்து லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை
வருமானம் இருந்தால் முதல் நிலை செயல் அலுவலரும், அதற்கு மேல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் இருந்தால் உதவி ஆணையர் அந்தஸ்திலும் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

அதற்கு மேலும் வருமானம் உள்ள கோவில்களுக்கு துணை ஆணையர் அல்லது இணை ஆணையர் நியமிக்க வேண்டும். தற்போது அந்த நிலை பின்பற்றப்படவில்லை. பெரும்பாலான
கோவில்களின் வருமானம் உயர்ந்து விட்டது. அதற்கேற்ப செயல் அலுவலர்கள் நியமிக்கப் படுவதில்லை.உதாரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், கந்தசாமி கோவில் வருமானம் ஆறு கோடி ரூபாயை தாண்டிவிட்டது. அங்கு இன்னமும் முதல்நிலை
செயல் அலுவலரே உள்ளார்.திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் வருமானம் ஒரு கோடி ரூபாயை தாண்டியும் மூன்றாம் நிலை செயல் அலுவலரே உள்ளார். நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றாலீஸ்வரர் கோவில் வருமானம் ஐந்து கோடி ரூபாயை தாண்டி விட்டது. அங்கும் நான்காம் நிலை செயல் அலுவலரே பணிகளை கவனிக்கிறார். இப்படி மாநிலம் முழுவதும் கோவில் வருமானத்திற்கு ஏற்ப செயல் அலுவலர்கள் நியமிக்கப் படவில்லை. உடனடியாக கோவில்களின் வருமானத்திற்கு ஏற்ப செயல் அலுவலர்களை நியமிப்பதோடு செயல் அலுவலர் பணியிடங்களையும் அதிகரிக்க வேண்டும்.

ஒருவருக்கு ஐம்பது : இது குறித்து கோவில் செயல் அலுவலர்கள் கூறியதாவது: ஒரு செயல் அலுவலர் 50 கோவில்களுக்கு மேல் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் அனைத்து பணிகளை யும் கண்காணிக்க முடிவதில்லை. கோவிலில் எந்த தவறு நடந்தாலும் செயல் அலுவலரை தண்டிக்கின்றனர். மற்ற பணியாளர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.இதன் காரணமாக பெரும்பாலான செயல் அலுவலர்கள் வேறு பணிக்கு சென்று விட்டனர். 36 ஆயிரம் கோவில்களை 600 செயல் அலுவலர்கள் நிர்வகிக்கும் நிலைமை உள்ளது.எனவே கோவில்களில் தவறு நடப்பதை தடுக்கவும், சொத்துகள் கொள்ளை போவதை தடுக்கவும்
போதுமான செயல் அலுவலர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !