லட்சியம் தோற்கலாம் லட்சியவாதிகள் தோற்பதில்லை!
மன அமைதியைப் பாதுகாக்க விரும்பினால், உங்களுக்குரிய கடமையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.இந்த உலகம் முட்டாள்கள் நிறைந்தது. இருந்தாலும், நீங்கள் அறிவுடையவராக நடக்கமுயலுங்கள்.அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். எந்த நிலையிலும் அடக்கத்தைக் கடைபிடியுங்கள். நான் உயர்ந்தவன் என்ற உயர்வு மனப்பான்மையோ, நான் தாழ்ந்தவன் என்ற தாழ்வு மனப்பான்மையோ யாருக்கும் தேவையில்லை.பிறர் உங்களை நிந்தனை செய்யும்போது, கண்களை மூடிக் கொண்டு மவுனத்தைக் கடைபிடியுங்கள்.யாரையும் குறை சொல்ல முற்படாதீர்கள். பிறருக்கு தீர்ப்புஅளிக்கும் அதிகாரம் உங்களுக்கு வழங்கப்படவில்லை.அடக்கமும், மனத்தூய்மையும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்காரணிகள். பகையுணர்வை உள்ளத்தில் வளர்க்க வேண்டாம். மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
மறந்து விடுவது இன்னும் நல்லது.கோபத்தால் ரத்தத்தில் நஞ்சு உண்டாகிறது. ரத்தக்கொதிப்பும், படபடப்பும், நடுக்கமும் கோபத்தின் விளைவுகளே.எப்போதும் வேலையில் சுறுசுறுப்புடனும், விருப்பத்துடனும் ஈடுபடுங்கள். பணத்தைக் காட்டிலும் மன அமைதியைப் பெரிதாக மதிப்பவன் நற்செயல்களில் மட்டுமே ஈடுபடுவான்.அருளாளர்களின் அறிவுரைகள், சான்றோர்களின் நல்ல சிந்தனைகளை மதித்துப் போற்றுங்கள். அவர்களின்வழியில் வாழ்ந்து காட்டுங்கள். உலகமே ஒன்று திரண்டு வந்து தடுத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.ஒருபோதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள். உங்களது துன்பத்திற்கு பிறரைப் பழித்துக் கூறாதீர்கள்.வாழ்வில் இப்போதிருக்கும் நிலையை விட நல்ல உயர்ந்த நிலைக்கு மாற்றி அமைக்கமுயலுங்கள். மாற்ற முடியாத விஷயங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். அன்றாடத் தேவைக்குக் கூட பிறரை சார்ந்து வாழாதீர்கள். சுயதேவைகளை நீங்களே பூர்த்தி செய்து சொந்தக் காலில் நிற்கப் பழகுங்கள். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். சூழ்நிலையில் இருந்து தப்பி ஓடப் பார்க்காதீர்கள். லட்சியத்துடன் வாழ்வதே உண்மையான வாழ்க்கை.லட்சியம் தோற்றாலும் லட்சியவாதிகள் ஒருபோதும் தோற்பதில்லை. என்றாவது ஒருநாள் லட்சியத்தை அடைவது உறுதி. சிறியதா, பெரியதா என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். பிறருக்கு இயன்ற உதவியைச் செய்து மகிழ்ச்சி அடையுங்கள். நல்ல குணங்கள் எல்லாம்ஒருவனுக்கு ஒரே நாளில் உண்டாவதில்லை. விடாமுயற்சியால் மட்டுமே அதை அடையமுடியும்.