உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மறைமலைநகர் : திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. மறைமலைநகர் அடுத்த திருக்கச்சூர் கிராம மலைப்பகுதியில், இருள் நீக்கி அம்பாள் உடனுறை மருந்தீசுவரர் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள், பழமை வாய்ந்த இக்கோவிலில், நவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி மற்றும் கார்திகை தீப நாட்களில், ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். பல வருடங்களாக இக்கோவில் பராமரிப்பின்றி காணப்பட்டது. மருந்தீசுவரர் தியாகராஜர் திருக்கோவில் இறைப்பணி சபையினர் கோவில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த ஒரு வார காலமாக, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மூர்த்தி ஹோமம், திரவிய ஹோமங்கள் நடந்தது. நேற்று, சிவாச்சாரியார் நடராஜ குருக்கள் தலைமையில், காலை 6மணிக்கு யாக பூஜை துவங்கியது. பின் கலசங்களில் புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு, 9 மணிக்கு கோவில் விமான கலசங்ககள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் சந்திரசேனா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !