வத்திராயிருப்பு வடக்காச்சியம்மன் கோயிலில் மதுக்கலய வழிபாடு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வடக்காச்சியம்மன் கோயிலில் நள்ளிரவில் நடந்த மதுக்கலய வழிபாட்டில் மது பொங்கி வழிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா துவக்க விழாவாக இந்த மதுப்பொங்கல் விழா கொண்டாடப்படும். ஊருக்கு வெளியே அமைந்துள்ள வடக்காச்சியம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடத்தியும், மதுக்கலய வழிபாட்டுடனும் இவ்விழா நடைபெறும். பருவமடையாத பெண்ணின் கையில் மதுக்கலயம் வழங்க, அப்பெண் வீட்டிலிருந்து ஊர்வலமாக கோயிலுக்கு புறப்பட்ட போது, பக்தர்கள்உணர்ச்சிப்பெருக்குடன் சாமியாடிய படியே வந்தனர். கோயிலை சுற்றிவந்து மதுக்கலயம் கோயில் முன்பாக உள்ள பலிபீடத்தில் இறக்கி வைக்கப்பட்டது. மது பொங்கி வழிந்தால் அந்த ஆண்டு முழுவதும் மழை பெய்து வளம் பெருகும் என்பது ஐதீகம். அம்மதுக்கலவை எந்தப்பக்கமாக பொங்கி வழிகிறதோ அந்த திசையில் மட்டுமே செழிப்பு காணப்படும் என்பதும் மற்றொருஐதீகம். அதன்படி நேற்று முன்தினம் நடந்த மதுக்கலய வழிபாட்டில் மூன்று கலயங்களும் ஒவ்வொரு திசையை நோக்கி, நான்கு திசைகளிலும் பொங்கி வழிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.