சற்குருவின் தரிசனமே சதாசிவ தரிசனம்!
ADDED :2598 days ago
மாதா...பிதா....குரு....தெய்வம்.... என்று வாழ்க்கையை வரிசைப்படுத்துவர். தாய் நமக்குத் தந்தையைக் காட்டுகிறாள். தந்தை நமக்குக் குருவை காட்ட வேண்டும். குருதான் நமக்குத் தெய்வத்தைக் காட்ட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இந்த உலகத்திற்குரிய ஞானமாகிய அபரஞானத்தைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் மாறுவது இயல்பு. அதேபோல் ஆன்ம <உலகத்திற்குரிய ஞானமாகிய பர ஞானத்தைக் கற்றுத்தரும் ஆசிரியர்களாகிய குருமார்களும் நம் மனப்பக்குவம் உயர உயர மாறுவது இயல்பு.
குரு தட்சணையாகவோ, கட்டணமாகவோ பணம் பெற்றுக்கொண்டு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்னும் யோக நிலைகளைக் கற்றுத் தருவோரே காரிய குருமார். இவர்களை வணங்கிக் கட்டணம் செலுத்தி யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குமேல் இவர்கள் பின்னால் சுற்றுவதால் எந்தப் பயனும் கிடைக்காது. நம் கட்டணத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் வினைப்பதிவுகளை நீக்கவும் தவநிலையில் நாம் உயரவும் வழிகாட்டும் தன்னலமற்ற குருமாரே மூன்றாம் நிலையில் வாய்க்கும் காரண குருமார். இவர்களை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். இவர்கள் மட்டுமே மந்திர உபதேசம், தீட்சை போன்றவற்றை வழங்கும் வல்லமையும் தகுதியும் பெற்றோர். இவர்கள் காட்டும் வழியில் ஜெபம், தியானம், தவம் போன்ற முயற்சிகளைச் செய்தல் வேண்டும். இறைவனே குருவாக வந்து ஆட்கொள்ளும் இறுதி நிகழ்வே சத்குரு தரிசனம். அந்த சத்குரு தரிசனமே சதாசிவ தரிசனம். இது ஊர் அறிய நிகழ்வதல்ல, காதலனும் காதலியும் பள்ளியறையில் சந்தித்துக்கொள்ளும் சாந்தி முகூர்த்த நிகழ்வுபோல் இரகசியமாய் நிகழ்வது. அது கிடைக்கத் தவம் கிடக்க வேண்டும்.