புரட்டாசி கடைசி சனிக்கிழமை கோயில்களில் குவிந்த பக்தர்கள்
பழநி:புரட்டாசி கடைசி சனியை முன்னிட்டு, பழநி பகுதியிலுள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடுசெய்தனர்.
பழநி மேற்குரதவீதி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு பெருமாளுக்குசிறப்பு அபிஷேகம் மலர் அலங்காரம், துளசிஅர்ச்சனை செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம், துளசி, கற்கண்டு, பொரி, அவல் பிரசாதமாக வழங்கினர். காந்தி மார்க்கெட்டில் உள்ள வேணுகோபால சுவாமிகோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள், தானாக வளர்ந்த கண்ணாடி பெருமாள்கோயில், ராமநாதபுரம் லட்சுமிநரசிம்மப்பெருமாள் மற்றும் பாலாறு-பொருந்தலாறு, பாலசமுத்திரம், கரடிக்கூட்டம் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்புவழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு, வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.