சூரிய , சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பஸ்வாமி வலம்
ADDED :2546 days ago
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான நேற்று, சூரிய மற்றும் சந்திர பிரபை வாகனங்களில், மலையப்பஸ்வாமி, மாடவீதியில் வலம் வந்தார். ஆந்திர மாநிலம், திருப்பதி – திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில், 10ம் தேதி முதல், நவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. ஏழாம் நாளான நேற்று, மலையப்பஸ்வாமி, மகாவிஷ்ணு அவதாரத்தில், ஒளிபொருந்திய சூரிய பிரபை வாகனத்தில், மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின், கோவிலுக்குள் சாத்துமுறை, ஆஸ்தானம் உள்ளிட்டவை நடந்தன. பின், திருமஞ்சனமும், ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டன. இரவில், வெண்ணிற மாலைகளை அணிந்து, குளிர்ச்சியான ஒளி பொருந்திய சந்திரபிரபை வாகனத்தில், மலையப்பஸ்வாமி வலம் வந்தார். இதைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாடவீதியில் திரண்டிருந்தனர்.