உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்

குழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழியிட்ட தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்

மதுரை, இவ்வுலகில் அழியாத செல்வம் கல்விச்செல்வம். அதை தங்கள் குழந்தை செல்வங்களுக்கு முறையாக வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இந்த கடமை உணர்வுடன் விஜயதசமி நாளான நேற்று மதுரை மேலமாசிவீதி சிவகங்கை சமஸ்தானத்தின் இம்மையில் நன்மை தருவார் கோயிலில் தினமலர் நாளிதழ் சார்பில் இரண்டாவது ஆண்டாக நடந்த அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் பெற்றோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கோயிலுக்குள் பட்டாம்பூச்சிகள் போல அங்கும், இங்கும் ஓடி விளையாடிய குறும்பு குழந்தைகள் எல்லாம் அரிச்சுவடிக்காக அம்மாக்களின் மடியில் சமர்த்தாக வந்து அமர்ந்து கொண்டனர். பரிசாக தினமலர் வழங்கிய சிலேட்டு, குச்சி, புத்தகத்தை ஆசை ஆசையாய் கையில் எடுத்து அம்மா, அப்பா மாதிரி நானும் எழுதுவேன் என, மழலை மொழியில் கொஞ்சி பேசியதை பார்க்க பரவசமாக இருந்தது.காலை 8:00 மணிக்கு தலைமை அர்ச்சகர் தர்மராஜ்சிவம், சரஸ்வதிதேவிக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்து வேத மந்திரத்துடன் அரிச்சுவடியை ஆரம்பித்தார். அவர் கூறுகையில், கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, இக்குழந்தைகளுக்கு சகல திறமைகளையும் அளித்து அருள்புரிவார். கல்வியில் சிறந்தவர்களாக இவர்கள் வருவார்கள் என்றார்.பெற்றோர், குழந்தைகளின் ஆள்காட்டி விரலை பிடித்து தாம்பூல தட்டில் நிரப்பியிருந்த அரிசியில் முதலில் ஓம் அடுத்து அ என எழுதவைத்தனர். குழந்தைகள் ஒவ்வொருவரும் பட்டம் படித்து முடித்த தோரணையில் கெத்து காட்டினர். பெற்றோர் கூறியதாவது..

மகளுக்கு மகிழ்ச்சி: தினமலர் நாளிதழ் குழந்தைகளின் படிப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. என் மகள் அசோதா ஸ்ரீ நாச்சியார் சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தேன். நிகழ்ச்சி ஏற்பாடு திருப்தியாக இருந்தது. தினமலர் வாசகியாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. நன்றி.டி.அனுப்பிரியா

பயன் தரும் பட்டம்: சமூக சேவையில் அதிகம் ஆர்வம் காட்டுவதில் தினமலர் நாளிதழை யாரும் மிஞ்சிவிட முடியாது. அதேபோல் குழந்தைகளின் கல்வி அறிவை வளர்க்க பட்டம் இதழை வழங்குவது பயனுள்ளதாக இருக்கிறது. மகன் சிஜய் குருவுக்கு பட்டம் படித்துக் காட்டுவது என் வழக்கம்.என்.வைஷ்ணவி

மகள் எழுதிய அ :
நான் 20 ஆண்டுகளாக தினமலர் வாசகி. குழந்தைகளுக்காக இப்படி ஒரு அருமையான நிகழ்வை நடத்துவது பாராட்டுக்குரியது. என் மகள் ஸ்ரீ ஜெய் சனா, அர்ச்சகர் சொல்ல சொல்ல அழகாக அ எழுதி நெகிழ்ச்சியடைய செய்தாள்.எஸ்.சரண்யா

அரிச்சுவடிக்கு ஒரு சல்யூட்: எங்கள் வீட்டில் எப்போதும் தினமலர் தான்... அதனால் பட்டம், சிறுவர் மலருக்கு மகன் சாய் சித்தார்த் தீவிர ரசிகன். அதில் வரும் கார்ட்டூன்களை பார்த்து அம்மா அது என்ன, இது என்ன என கேட்டு தெரிந்து கொள்வான். அரிச்சுவடி முயற்சிக்கு பெரிய சல்யூட்.கே.ஐஸ்வர்யா

மறக்க முடியாத நாள்: தினமலர் நாளிதழ், இணைப்புகள் அனைத்தையும் விரும்பி படிப்பேன். மகள் நட்சத்திராவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று அவளுக்கு எழுத கற்றுக் கொடுத்த இந்த நாளை மறக்க முடியாது. வாழ்வில் நல்லதொரு நிகழ்வை தந்த தினமலர் நாளிதழை வாழ்த்துகிறேன்.எஸ்.கவிதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !