குலசை தசரா விழா கோலாகலம்
துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரை அடுத்த, குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா பிரசித்தம். இந்தியாவில், மைசூருக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா கிராமிய மணம் வீச ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
இத்திருவிழாவின, 10ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து முத்தாரம்மனுக்கு சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது.தசரா திருவிழாவையொட்டி, பல லட்சம் பக்தர்கள் கோவிலில் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தீசட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் நடந்தது. முதலில் மகிஷாசூரன் தன்தலையுடனும், இரண்டாவதாக சிங்கமுகமாக மாறியும், மூன்றாவதாக யானை தலையுடனும், கடைசியாக சேவல் முகமாக மாறி மகிஷாசம்ஹாரம் நடந்தது.பின், கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில், முத்தாரம்மன் எழுந்தருளியதும், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின், சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து தேரில் எழுந்தருளி முத்தாரம்மன் வீதியுலா நடந்தது.அம்மன் வீதி உலா வந்து நேற்று மாலை மீண்டும் கோவிலை சேர்ந்தார். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.