உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: பக்தர் அதிருப்தி

செங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: பக்தர் அதிருப்தி

பல்லடம்: அல்லாளபுரம் ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவில் மூலஸ்தானம், செங்கல்லில் கட்டப்படுவதற்கு, பக்தர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல்லடத்தை அடுத்த கரைப்புதுார் ஊராட்சி, அல்லாளபுரத்தில், பிரசித்தி பெற்ற, ஸ்ரீஉண்ணாமுலையம்மன் உடனமர் ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த, 24 ஆண்டுகளுக்கும் மேலாக, கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்களின் தொடர் கோரிக்கையினால், கோவில் புனரமைக்க திட்டமிடப்பட்டு, ஜூன், 9ல் பாலாலயம் நடந்தது. இந்நிலையில், மூன்று மாதங்களாக, கோவில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஸ்ரீஉலகேஸ்வரர் சுவாமி கோவில் மூலஸ்தானம், செங்கல்லில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பக்தர்கள் கூறியதாவது: பழமையான இக்கோவிலை, முறையாக பராமரிக்காமல், அறநிலையத் துறையினர் அலட்சியப்படுத்தி விட்டனர். அதன் காரணமாக, கோவில் சிதிலமடைந்து விட்டது. தற்போது, பொதுமக்களின் பங்களிப்புடன், கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூலஸ்தானம், கருங்கல்லில் கட்டாமல், செங்கல்லில் கட்டுகின்றனர். பழமை வாய்ந்த கோவில்கள் அனைத்தும், கருங்கல்லிலேயே கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆனால், அது குறித்து எடுத்து கூறியும், ஏற்க மறுத்து, செங்கல்லில் பணிகளை தொடர்ந்து வருகின்றனர். அறநிலைய துறை அதிகாரிகளின் இந்த செயலை, கண்டிக்கிறோம். கருங்கல்லில் கட்டாவிடில், போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !