திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில், 8,500 போலீசார்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணியில், 8,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என, எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி கூறினார்.திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா வரும், 14ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 23ல், 2,668 அடி மலை உயரத்தில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை, எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி ஆய்வு செய்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பக்தர்களின் பாதுகாப்பில், 8,500 போலீசார் ஈடுபட உள்ளனர். நகரின் முக்கிய இடம், கிரிவலப்பாதை என, 34 இடங்களில் காவல் உதவி மையங்கள், 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. திருவண்ணாமலை நகரில், 217 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ஆளில்லா குட்டி விமானம் மூலம், கண்காணிக்கப்பட உள்ளது. 2,000 பேர் மலை மீது ஏறி, தீப தரிசனம் காண அனுமதி வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.