சபரிமலை - பம்பை இடையே பறக்கும் கேமராவில் கண்காணிப்பு
பம்பை: சபரிமலை - பம்பை இடையே பறக்கும் கேமராக்களை அனுப்பி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்றம் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மண்டல, மகர பூஜை காலங்களில் பக்தர்கள் போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து பம்பை காவல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய தனிப்பிரிவு துவங்கப்பட்டது.
சபரிமலை-பம்பை இடையே 4 கி.மீ., வரை பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அனுப்பி தகவல் சேகரிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்குரியவர்கள் குறித்து வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஐப்பசி மாத பூஜையின் போது முதல் முறையாக 50 வயதிற்கு மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் (நவம்., 17ல்) மண்டல, மகர பூஜை துவங்கியதால் கூடுதலாக 50 வயது பெண் போலீசார் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.