சபரிமலை விவகாரம்: கேரளா மீண்டும் மனு?
ADDED :2516 days ago
திருவனந்தபுரம், சபரிமலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, கேரள மாநில தலைமை செயலர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இது தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, சபரிமலையில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, மாநில போலீஸ் தலைமை அதிகாரி, லோக்நாத் பெஹ்ரா, 40 பக்க அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தொடர்பான அறிக்கையுடன், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய, மாநில அரசு முடிவு செய்து உள்ளது.