உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையில் நாம சங்கீர்த்தன மேளா நிறைவு ராதா கல்யாண மஹோத்ஸவம் கோலாகலம்

நெல்லையில் நாம சங்கீர்த்தன மேளா நிறைவு ராதா கல்யாண மஹோத்ஸவம் கோலாகலம்

திருநெல்வேலி : நெல்லையில் நடந்த மாபெரும் நாம சங்கீர்த்தன பாகவத மேளா ராதா கல்யாண மஹோத்ஸவத்துடன் நேற்று நிறைவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லையில் பல ஆண்டுகளுக்கு பின் மாபெரும் நாம சங்கீர்த்த பாகவத மேளா கடந்த 17ம் தேதி ஜங்ஷன் சிருங்கேரி சாரதா கல்யாண மண்டபத்தில் துவங்கியது. பொன்னம்மாள், பிச்சம்மாள் குழுவினரின் தோடய மங்களம், குரு கீர்த்தனை, பாகவத குழுவினரின் நகர சங்கீர்த்தனம், ஆய்குடி குமார் பாகவதர் குழுவினரின் சாதுக்கள் நாம மகிமை பஜனை நடந்தது. நேற்று முன்தினம் தஞ்சாவூர் தியாகராஜ பாகவதர் குழுவினரின் பஞ்சபதியும், மீனாட்சி மகாதேவன் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், மஞ்சப்புறா மோகன் பாகவதர் குழுவினரின் தியாகனம், பெங்களூர் ரகுமாயி பாண்டுரங்க பஜனை மண்டலி குழுவினரின் நாம சங்கீர்த்தனம், ஈரோடு ராஜாமணி பாகவதர் குழுவினரின் பூஜை, திவ்யநாமம், தீபப்பிரதட்சணம், டோலோஸ்தஸவம் நடந்தது.

ராதா கிருஷ்ணன் கல்யாணம்: பாகவத மேளாவின் நிறைவு நாளான நேற்று காலை புதுக்கோட்டை நரசிம்ம பாகவதர் குழுவினரின் உஞ்சவிருத்தி, ராமானந்த சரஸ்வதி சுவாமிகளின் ராதா கல்யாண மஹோத்ஸவம், மாங்கல்ய தாரணம் நடந்தது. இதில் புதுக்கோட்டை பாகவதர் குழுவினரோடு ராஜாமணி பாகவதர், ராஜகோபால் பாகவதர் குழுவினரும் பஜனைப் பாடல்களை பாடினர். இரவு கடையநல்லூர் ராஜகோபால் பாகவத குழுவினரின் அபங்க திவ்யநாம சங்கீர்த்தனம், ஆஞ்சநேய உற்வசம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாகவத மேளாவை முன்னிட்டு உலக நலனுக்காக கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம் ஆகியவையும், அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை ராதாகிருஷ்ண பஜனை மண்டலியை சேர்ந்த பாஸ்கர வாத்யார், ஐஸ்வர்யா கணேஷ், ஐயப்பன், கண்ணன், பவானிகணேசன், குழந்தை நாராயணன், பொன்னப்ப ஐயங்கார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !