சிவாலய தரிசனம் முன்கூட்டியே துவக்கம்
திற்பரப்பு : சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வழக்கத்திற்கு மாறாக நேற்று காலை முதல் சிவாலய தரிசன பயணம் துவங்கினர். குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களை சிவராத்திரியை முன்னிட்டு சிவபக்தர்கள் ஓடி தரிசிக்கும் நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடந்து வருகிறது. சிவராத்திரிக்கு முந்தைய நாள் மாலை முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் தரிசனம் செய்து துவங்கும் புனித யாத்திரை சிவராத்திக்கு மறுநாள் அதிகாலை முடித்து கொள்வது வழக்கம். ஆனால் வாகனங்களில் பெரும்பாலான பக்தர்கள் செல்ல துவங்கியது முதல் சிவராத்திரி நாளில் காலை முதல் புனித யாத்திரையை துவங்குகின்றனர். நடந்தும், சைக்கிள் மூலமும் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்பவர்கள் சிவராத்திரிக்கு முந்தைய நாள் மாலை முதல் ஓடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நேற்று காலை முதலே பக்தர்கள் வருகை காணப்பட்டது. காலை 10 மணி முதல் இரண்டு கோயில்களை தரிசித்து மூன்றாவது கோயிலான திற்பரப்புக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து வந்தனர். இதுபோல் காலை முதல் வாகனங்களிலும் அதிகளவு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமானோர் வாகனங்களில் சிவாலய தரிசனத்தில் கலந்து கொண்டனர். குமரி மாவட்ட பக்தர்கள் சிவராத்திரி நாளில் மரபுபடி கோயில்களை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அடுத்த ஆண்டாவது உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.