ஈஷா யோகா சிவராத்திரி விழா தூத்துக்குடியில் நேரடி ஒளிபரப்பு
தூத்துக்குடி : கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மஹா சிவராத்திரி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தூத்துக்குடியில் உள்ள அழகர் மஹாலில் வைத்து பெரிய திரை மூலம் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தூத்துக்குடி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி இரவு முழுவதும் சத்குருவின் சத்சங்கத்தோடு கொண்டாடப்படுகிறது. சத்குருவின் அருளுரைகள், சக்திமிக்க தியானங்கள், புகழ்பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் இன்று மாலை 5.40 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரையிலும் நடக்கிறது. ஈஷாவில் நிகழும் இறை விழாவின் அனுபவங்களை நேரடி ஒளிபரப்பின் மூலம் நமது நகரிலேயே உணர தூத்துக்குடி ஈஷா தன்னார்வ தொண்டர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். தூத்துக்குடி அழகர் மஹாலில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பெரிய திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு குருபூஜை, அன்னதானம் தொடர்ந்து ஈஷா சமூக நலத்திட்டங்களின் கண்காட்சி மற்றும் ஈஷா தயாரிப்புகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். ஆன்மீக அனுபவங்களை அள்ளித்தரும் இந்த இரவின் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.