வேதகிரீஸ்வரர் கோவில் விடுதிகள் புனரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதி, நீண்டகாலமாக பயனின்றி சீரழிந்துள்ளது. அதை புதுப்பித்து பயன்படுத்த, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வரும் பக்தர்கள், 3 கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ள குன்றுகளை சுற்றி, மாதந்தோறும், பவுர்ணமி கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். இப்பகுதி, சென்னை அருகில் உள்ளதால், திருவண் ணாமலை கிரிவலம் செல்ல இயலாத பக்தர்கள், இங்கு செல்கின்றனர். கிரிவல பக்தர்கள் அதிகரிக்கும் சூழலில், அறநிலையத்துறை, மலைக்கோவிலுக்கு ‘ரோப் கார்’ இயக்கவும் அறிவித்துள்ளது. வருங்காலத்தில், பக்தர்கள் மேலும் அதிகரிப்பர். பக்தர்கள் இங்கேயே தங்கி, வழிபட விரும்பும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில், தங்கும் விடுதி அவசியம். இதையடுத்து, நால்வர்கோவில்பேட்டை கிரிவல பாதை பகுதியில், கடந்த 1991ல், வேதகிரி குடில் என்ற பெயரில், உபயதாரர் ஒருவர் விடுதி கட்டடம் கட்டினார். பின்னர், தன்னிறைவு திட்டத்தில், மேலும் இரண்டு கட்ட டங்கள் கட்டப்பட்டன. இவ்வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படாமல், பராமரிப்பும் இல்லாமல் உள்ளன. செங்கல்பட்டு சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், விடுதி கட்டடமும் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் புவியரசு கூறியதாவது: கட்டடத்தை ஆய்வு செய்ததில், முதலில் கட்டிய கட்டடம் மட்டும் முழுதாக சேதமடைந்துள்ளதால் அதை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தனர். மற்ற இரண்டு கட்டடங்கள் நல்ல நிலையில் தான் உள்ளது. உபயதாரர்கள் மூலம், 19 லட்சம் ரூபாய் மதிப்பில், விடுதி வளாக சாலை, 35 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் ஆகியவை அமைக்கவும், இரண்டு கட்டடங்களை புதுப்பிக்கவும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.