உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரியன்காவில் ஜோதி ரூப தரிசனம்

ஆரியன்காவில் ஜோதி ரூப தரிசனம்

ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியன்காவு தர்மதாஸ்தா கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று மாம்பழத்துறையில் ஜோதி ரூப தரிசனம் நடந்தது.
அன்னதான பிரபுவான தர்மசாஸ்தா சவுராஷ்டிர சமூக தேவியை மணந்து கொண்டதாக ஐதீகம். ஆண்டுதோறும் இந்த திருமண விழாவை கொண்டாடுவதற்காக
ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிர மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பை திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவசம் போர்டு சம்மந்தி முறையாக அழைத்து கவுரவிக்கின்றனர். இந்த ஆண்டு திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாம்பழத்துறையில் எழுந்தருளியுள்ள புஷ்கலா தேவி கோயிலில் நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6:30 மணிக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம், 7:00 மணிக்கு மணமகளான தேவிக்கு மணமகள் அலங்காரம் செய்விக்கப்பட்டது.

பகல் 2:00 மணிக்கு அம்பாளை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து சங்கம் சார்பில் அலங்கார ஊர்தியில் மாம்பழத்துறையில் இருந்து மேளதாளம் முழங்க
ஆரியன்காவுக்கு அழைத்து வந்தனர். மாலை 6:45 மணிக்கு ஆரியன்காவு கோயில் கருவறையில் ஐயனோடு அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகும் காட்சி
நடந்தது. பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (டிச., 25) பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ராஜகொட்டாரத்தில் இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. இதில் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், மதுரை எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளை (டிச., 26) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் ராகவன், ராஜன், மோகன், ஹரிஹரன், கண்ணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !