விடங்கேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜைகள்
கிள்ளை :தில்லைவிடங்கனில் பழமை வாய்ந்த விடங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோவிலில் விடங்கேஸ்வரரையும், பர்வதாம்பாளையும் ஞாயிற்றுக்கிழமை நல்லெண்ணையில் இரு தீபம் ஏற்றி வழிபட்டால் காது கேளாதவர்கள், வாய்ப்பேச முடியாதவர்கள் குணமடைவதாக ஐதீகம். சிறப்பு மிக்க இக்கோவிலில் 1887ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போதைய அறங்காவலர் தியாகராஜன் தலைமையில் கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வரும் நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் விடங்கேஸ்வரர் பர்வதாம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 9 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணி வரை நான்கு கால பூஜைகள் நடந்தது.