மேல்மலையனூர் அக்னி குளத்தில் தீர்த்தம் எடுத்துச் செல்லும் பக்தர்கள்
அவலூர்பேட்டை :மேல்மலையனூர் அக்னி குளத்தில் மாசி மாதத்தை முன்னிட்டு தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனூரில் உள்ள அக்னி குளத்தில் மாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. பெங் களூரு, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வருகின்றனர். இந்த பக்தர்கள் முதலில் அம்மனை தரிசித்து தீபாராதனை செய்கின்றனர். பின்னர் ஊர்வலமாக வந்து அக்னி குளத்தில் குடத்தில் தீர்த்தம் எடுத்து பக்தியுடன் ஊர்வலமாக கோவிலுக்கு மீண்டும் வந்து, தீபாராதனை செய்கின்றனர். இந்த தீர்த்தத்தை தங்களது ஊருக்கு சென்று அங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீர்த்தப்பிரசாதமாக, பக்தியுடன் வழிபடுகின்றனர். இம்மாதத்தில் தங்களது ஊரில் விழா எடுப்பதற்கும் இந்த தீர்த்தத்தை எடுத்துச் செல்கின்றனர்.