ஆனைமலை அடுத்த காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவிலில் பூப்பொங்கல் வழிபாடு
ஆனைமலை:ஆனைமலை அடுத்த காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவிலில், பூப்பொங் கலை முன்னிட்டு கால்நடைகள் நலனுக்காக சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆனைமலை அடுத்த காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவிலில், ஆண்டுதோறும் பூப்பொங்கல் அன்று, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் விவசாயம் பெருகவும், கால்நடைகள் நலனுக்காகவும் வழிபடுவது வழக்கம்.கோவில் வளாகத்தில் கால்நடைகளின் உருவபொம்மைகள் வைத்து வழிபட்டால், அவை ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது ஐதீகம்.
நேற்று (ஜன., 17ல்) பூப்பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து பழமை மாறாமல், நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் விவசாயிகள் வந்து வழிபட்டனர். வேண்டுதலை நிறைவேற்ற பலரும், மாடு, ஆடு, கோழி, குதிரை, மனித கால்கள் உள்ளிட்ட உருவார பொம்மைகளை வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில், மாட்டேகவுண்டன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.