உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி ஏகாம்பரர் தங்க தேர் 10 அடி தள்ளி நிறுத்தம்

காஞ்சி ஏகாம்பரர் தங்க தேர் 10 அடி தள்ளி நிறுத்தம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்காக செய்யப்படும், தங்க தேர் செய்யும் திருப்பணி, போதிய தங்கம் இல்லாமல், மூன்று ஆண்டுகளாக முடங்கியுள்ளதால், வாஸ்து முறைப்படி, 10 அடி தள்ளி நிறுத்தப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், மிகவும் பழமையானது ஏகாம்பர நாதர் கோவில்.

இக்கோவில், 23.5 ஏக்கரில், ஐந்து பிரகாரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் போது, ஆறாம் நாள் உற்சவத்தில், ஏலவார் குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர் வெள்ளித் தேரில் உலா வருவார். ஏழாம் நாள் உற்சவத்தில், மரத்தேரில் உலா வருகிறார்.அம்பிகையுடன், ஏகாம் பரநாதர் தங்கத்தேரிலும் வலம் வர வேண்டும் என, சிவ பக்தர்களின், பல ஆண்டு கோரிக்கையாக இருந்தது.இந்நிலையில் கடந்த, 2014, செப்., 7ல், ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை சார்பில், தங்கத்தேருக்கான திருப்பணி துவங்கியது.பக்தர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன், 24 அடி உயரமும், 14 அடி அகலமும் கொண்ட தங்கத் தேர் செய்ய திட்டமிடப்பட்டது.திருப்பணிக்கு, 32 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி, 1,500 கிலோ செப்புத்தகடு என, 12 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது.செப்புத்தகட்டின் மீது, தங்கத் தகடு பொருத்த, மிகவும் குறைந்த அளவு தங்கம் மட்டுமே நன்கொடை யாக கிடைத்துள்ளது.

அதன் மூலம் தேரின் சிறு சிறு பாகங்களுக்கு மட்டுமே, தங்கத்தகடு பொருத்தப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், 27 கிலோ தங்கம் கிடைத்தால் மட்டுமே, தங்கத்தேர் திருப்பணி நிறைவு பெறும் என்கின்றனர். தேர் திருப்பணிக்கு, போதுமான தங்கம் கிடைக்காததால், மூன்று ஆண்டுகளாக தங்கத்தேர் திருப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தங்கத்தேர் திருப்பணி தொய்வு ஏற்பட்டுள்ளதால், வாஸ்து படி இடமாற்றம் செய்தால், திருப்பணி தாமதம் இன்றி விரைவில் முடியும் என, வாஸ்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.இதனால், ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து, 10 அடி வரை தள்ளி, தேர் நிறுத்தப்பட்டுள்ளது. போதிய தங்கம் கிடைக்கவில்லை என கூறப்பட்டு வரும் நிலையில், வாஸ்துபடி இட மாற்றம் செய்து தேர் நிறுத்தப்பட்டுள்ளால், பக்தர்கள், நன்கொடையாளர்களின் உதவியால், தங்கம் கிடைக்கப் பெற்று, தங்கத்தேர் திருப்பணி விரைந்து முடியும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு கொள்ளலாம்மூன்று ஆண்டுகளாக ஏகாம்பரநாதருக்கு, தங்கத்தேர் செய்யும் திருப்பணி முடங்கியுள்ளதால், திருப்பணி நிறைவு பெற, தங்கமாகவோ, பணமாகவோ வழங்க விரும்பும் பக்தர்கள், நன்கொடையாளர்கள், ஸ்ரீ ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளையின், 94433 21133 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !