பழநியில் குவிந்த பக்தர்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பழநி:பழநி மலைக்கோயிலில் நேற்று குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.தைப்பூசவிழா முடிந்த பின்னரும், பழநி முருகன் கோயிலுக்கு சனி, ஞாயிறு தினங்களில் பாதயாத்திரை பக்தர்கள், வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தினர்.பொதுதரிசன வழியில் 4 மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு தங்கரத புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.கிரிவீதியில் தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் தரைவிரிப்பு பாய்கள், தற்காலிக நிழற்பந்தல் உள்ளன. இருப்பினும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக நிழற்பந்தல்கள், தரைவிரிப்பு பாய்கள் அமைக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.