மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் கட்டும் பணி
செஞ்சி:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் கட்டும் பணிக்கான சிறப்பு பூஜை நேற்று (பிப்., 11ல்)நடந்தது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 13 நாள் நடைபெறும் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் உற்சவம் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. 6ம் தேதி மயானக்கொள்ளையும், 9ம் தேதி தீமிதி விழாவும் நடக்கிறது.முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் 11ம் தேதி நடக்கிறது. மேல்மலையனூர் கோவில் புராணத்தின் படி மயானக்கொள்ளையன்று ஆவேசம் அடைந்து விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும், அங்காளம்மனின் கோபத்தை சாந்தப்படுத்த தேவர்கள் ஒன்று கூடி தேரின் பாகங்களாக மாறி விழா எடுக்கின்றனர்.
இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மேல்மலையனூர் தேர் திருவிழாவுக்கு புதிதாக தேர் வடிவமைக்கின்றனர். இந்த தேருக்கான சக்கரம், பீடம், கலசம் ஆகியவற்றை நிலையாக செய்து வைத்துள்ளனர். மற்ற பாகங்களை ஒவ்வொரு ஆண்டும் பச்சை மரங்களைக் கொண்டு செய்கின்றனர். இந்த ஆண்டு தேர்கட்டும் பணி நேற்று (பிப்., 11ல்) சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இதை முன்னிட்டு பீடம், கலசம் மற்றும் தேர்சக்கரத்திற்கு சிறப்பு ஹோமம் செய்தனர்.நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலவர்கள் கணேசன், ஏழுமலை, ரமஷே, செல்வம், சரவணன், மணி, சேகர் மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.