கோத்தகிரி அரவேனு மாங்காளி கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோத்தகிரி:கோத்தகிரி அரவேனு மாங்காளி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த, 7 மாலை, 3:30 மணிக்கு, தீர்த்த குடங்களை அள்ள மனையில் இருந்து எடுத்துவரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, திருவிளக்கு ஏற்றுதல், புனிதநீர் வழிபாடு, அனைத்து வழிபாடு, பிள்ளையார் வழிபாடு மற்றும் அனுமதி பெறுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, முதற்கால வேள்வி, திரவியங்கள் நல்குதல், நிறையாகுதி, பேரொளி வழிபாடு, மலர் அர்ச்சனை, திருமுறை விண்ணப்பம் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது. முக்கிய திருவிழா நாளான, 8, காலை, 6:00 மணிமுதல் திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, கோவிலை புனித நீர் கொண்டு தூய்மை செய்தல், காப்பு அணிவித்தல் மற்றும் திருமுறை விண்ணப்பம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, காலை, 8:00 மணிமுதல், 9:00 மணிவரை குடங்கள் கோவிலை வந்தடைந்தது. மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அலங்கார அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் உட்பட பொதுமக்கள் செய்திருந்தனர்.