ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவ கொடியேற்றம்
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கொடியேற்றத் துடன் துவங்கியது.ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்திபெற்ற பூவராகசுவாமி கோவில் மாசி மக உற்சவம் விமரிசையாக 23 நாட்களுக்கு நடைபெறும்.
இந்த ஆண்டு மாசி மக உற்சவம் நேற்று (பிப்., 10ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் கொடியேற்றம் நடந்தது. உற்சவம் நடக்கும் அனைத்து நாட்களும் தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை 13ம் தேதி இரவு தங்க கருட சேவை,15ம் தேதி அனுமந்த வாகனம், 16ம் தேதி யானை வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 17ம் தேதி அதிகாலை ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கிள்ளை சமுத்திர தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.வரும் 18ம் தேதி அதிகாலை சேத்தியாதோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் உற்சவமும், 19ம் தேதி கிள்ளை கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரியும் நடக்கிறது.
தொடர்ந்து 20ம் தேதி மகத்துவாழ்க்கை மண்டகப்படி, 24ம் தேதி புவனகிரியில் முத்துப் பல்லக்கில் வீதியுலா, 25ம் தேதி சிறப்பு திருமஞ்சனமும் நடக்கிறது. தொடர்ந்து 26ம் தேதி குமாரகுடி, கானூர் வழியாக நாச்சியார்பேட்டை, பாளையங்கோட்டை, ராமாபுரம் கிராமங்களில் உற்சவம் நடந்த பின்னர் அடுத்த மாதம் மார்ச் 4ம் தேதி பெருமாள் ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு வந்து சேருகிறார்.எல்லையில் சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் படுகிறது. மார்ச் 6ம் தேதி கொடியிறக்கம் நடக்கிறது.
ஏற்பாடுகளை தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மதனா மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.