உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாடு நலம் பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக பெருமாளை தினமும் வலம் வரும் மதுரை துக்காராம்

நாடு நலம் பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக பெருமாளை தினமும் வலம் வரும் மதுரை துக்காராம்

ஜெகதீசன்.... இந்த பெயருக்கும் மதுரை கூடலழகர் பெருமாளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த கோயிலுக்கு அடிக்கடி வருபவர்கள் இவரை தெரியாமல் இருக்க முடியாது. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக, ஒரு நாள் கூட விடாமல், தொடர்ந்து பெருமாள் கோயிலுக்கு வந்து விஷ்ணு பாராயணம் பாடி இங்குள்ள அஷ்டாங்க விமானத்தை 12 முறை வலம் வந்து  பாகவத கைங்கரியம் செய்து வருகிறார். இவர் இது நாள் வரையில் தனக்காக எதுவும் பெருமாளிடம் வேண்டியது இல்லை. நாடு நலம் பெறுவதற்காக மட்டுமே பெருமாளை வேண்டுவதாக கூறும் இவர் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார். வேலை நேரம் போக மீதி நேரமெல்லாம் இந்த பெருமாளே தஞ்சம் என கோயிலிலேயே இருக்கும் இவரை பலரும் மதுரை பக்த துக்காரம் என்றே அழைக்கிறார்கள். இவருடன் சேர்ந்து பக்தர்கள் பலரும் தினமும் அதிகாலை விஷ்ணு பாராயணம் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு பவுர்ணமிக்கும் இவர் தமது  பாராயணக்குழுவினருடன் அதிகாலை ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி 108 முறை அஷ்டாங்க விமானத்தை சுற்றி வருவதை பார்க்கும் போது இவர் ரூபத்தில் பெருமாளை தரிசிக்கலாம்.

இந்த மாதம் பவுர்ணமி பிப்ரவரி 19 நாளை செவ்வாய் கிழமை அன்று காலை 5.45 மணிக்கு இந்த குழுவினர் அஷ்டாங்க விமானத்தை  108 பிரதட்சணம் செய்கின்றனர். முடிந்தவர்கள் அவருடன் இணைந்து நாடும் நாட்டு மக்களும் நலம் பெற பிரதட்சணம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !