பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவிலில், 108ம் ஆண்டு குண்டம் திருவிழாவில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிணத்துக்கடவில், பிரசித்தி பெற்ற பிளேக் மாரியம்மன் கோவிலில், 108ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த, 4ம் தேதி, கொடி கட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. கடந்த, 17ம் தேதி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு நடந்தது. நேற்று முன்தினம், மாவிளக்கு ஊர்வலம், குண்டம் திறப்பும் நடந்தது. நேற்று அதிகாலை, ஆற்றில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கரகங்கள் கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மேல், அக்னி அபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களின் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 40க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்தனர். குண்டம் திருவிழா முடிவுக்கு வந்ததும் சக்திக்கரகம் ஆற்றில் விடப்பட்டது. திருவிழா பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று, மஞ்சள் நீராடலும், அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.