உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை வீரப்பூரில் வேடபரி விழா: மார்ச் 2ல் தேரோட்டம்

நாளை வீரப்பூரில் வேடபரி விழா: மார்ச் 2ல் தேரோட்டம்

மணப்பாறை: மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர் பெரியக்காண்டியம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற வேடபரி விழா மார்ச் ஒன்றாம் தேதி நடக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது வீரப்பூர். இங்கு கொங்கு நாட்டு மக்கள் குல தெய்வமாக வழிபடும் ஸ்ரீபெரியக்காண்டியம்மன் என்னும் சப்த கன்னிமாரம்மன் வகையறா கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பொன்னர், சங்கர், தங்காள், மகாமுனி, சாம்புவன், மாசி கருப்பண்ணசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் குடி கொண்டுள்ளன. கோவில்கள் அண்ணன்மார் ஸ்வாமி கோவில் எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மணப்பாறை சுற்றுப்புற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் அண்ணன்மார் ஸ்வாமிகளை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் அண்ணன்மார் சுவாமிகளின் திருவிழாவும் ஒன்று. ஆண்டுதோறும் மாசி மாதம், சதய நட்சத்திரத்தன்று கொடியேற்றப்படும். தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக நடக்கும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 22ம் தேதி கொடியேற்றப்பட்டு, தினசரி விழாக்கள் நடந்து வருகிறது. முக்கிய விழாக்களின் ஒன்றான வேடபரி விழா வரும் மார்ச் ஒன்றாம் தேதி மாலை ஆறு மணிக்கு நடக்கிறது. பொன்னர் குதிரை வாகனத்தில் கையில் அம்புடன் செல்ல, பின்னே பெரியக்காண்டியம்மன் யானை வாகனத்தில் வர, அனியாப்பூர் வரை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர். பெரியக்காண்டியம்மன் திருத்தேரில் எழுந்தருளி, வலம்பெரும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, வரும் மார்ச் இரண்டாம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இறுதி விழாவான மஞ்சள் நீராட்டு விழா மூன்றாம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வீரப்பூர் ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான கிருஷ்ணவிஜயன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சி, குளித்தலை, கரூர், திண்டுக்கல், மணப்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !