காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உழவார பணி
காஞ்சிபுரம்: சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், துாத்துக்குடி, திருவள்ளூர், வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்த உழவார பணி மன்றத்தினர், உழவாரப்பணி மேற்கொண்டனர்.
துாத்துக்குடியைச் சேர்ந்த திருவண்ணாமலை அன்னதானக்குழுவினர், 34 ஆண்டுகளாக, பல கோவில்களில், உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர். மார்ச், 4ல் சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, வேலுார் மாவட்டம், குருவராஜபேட்டை நால்வர் உழவார திருப்பணி மன்றம், திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அப்பர் உழவார திருப்பணி மன்றத்தினரை ஒருங்கிணைத்து, ஏகாம்பரநாதர் கோவிலில் உழவார பணி மேற்கொண்டனர். கோவில் பிரகாரங்களின் தரைப்பகுதி மேல்தளம், துாண்கள் ஆகியவற்றில் படிந்திருந்த துாசுகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். சிவராத்திரி முடிந்ததும், மீண்டும் ஏகாம்பரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ள உள்ளோம் என, திருவண்ணாமலை அன்னதானக் குழுவினர் தெரிவித்தனர்.