திருத்தணி மலை கோவிலில் கல்ஹார தீர்த்தக்குளம் சீரமைப்பு பணி
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உள்ள கல்ஹார தீர்த்தக்குளம், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சீரமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.திருத்தணி கோவிலின் தெற்குப் பகுதியில், கல்ஹார தீர்த்தக்குளம் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த குளத்து தண்ணீரை கொண்டு தான், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.
கோவில் நிர்வாகம், முறையாக தீர்த்தக்குளத்தை பராமரிக்காததால், குளம் பழுதடைந்தும், மாசுப்பட்டும், பக்தர்கள் தங்கள் கொண்டு வந்த பைகள், மாலை மற்றும் குப்பையை, மலையில் இருந்து கொட்டி வந்தனர். இதனால், குளத்தில் இருந்த தண்ணீர் மாசுப்பட்டு, பச்சை நிறமாக மாறியது. அதனால், தெக்களூரில் இருந்து, பைப் லைன் மூலம் கொண்டு வரும் தண்ணீரை கொண்டு, தற்போது மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது என, கோவில் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் திருத்தணி முருகன் திருவடி சபைக் குழுவினர் இணைந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மாசு அடையாமல் இருப்பதற்காக இரும்பு கம்பிகள் நட்டனர். அதன்மேல் தகடால் ஆன கூரைகள் அமைக்கும் பணி துரித வேகத்தில் நடக்கின்றன.இப்பணிகள், மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் முடிந்து, கல்ஹார தீர்த்தக்குளம் முறையாக பராமரிக்கப்படும் என, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.